சைலன்ட் வேலி - ஓர் திகில் சுற்றுலா

 Monday, November 11, 2019  03:30 PM   No Comments

கூகுளில் `சைலன்ட் வேலி (Silent Valley)’ என்று டைப் செய்தால், ரெசார்ட், மூவ்மென்ட், மூவி, ஊட்டி, வியூ பாயின்ட், நேஷனல் பார்க், பாலக்காடு என மனைவியைப்போல் முந்திக்கொண்டு பதில் சொல்லும். உங்களுக்கும் வழக்கம்போல் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தலைசுற்றும். நாம் இந்த வாரம் டூர் அடிக்கப்போவது, கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ள `சைலன்ட் வேலி தேசியப் பூங்கா'.

கோவையிலிருந்து வெறும் 113 கி.மீ-தான். பாலக்காடு, ஆனைகட்டி என இரண்டு வழிகள். இதைத் தேர்ந்தெடுப்பதிலும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும். பாலக்காட்டில் நம் ஊர்க்காரர்கள்தான் சாலை கான்ட்ராக்ட் எடுத்திருப்பார்கள்போல. ‘‘இன்னும் வேலை நடந்துகிட்டுத்தான் இருக்கு!’’ (அதாவது நடக்காமலே இருக்கு) என்றார்கள். அதனால் பாலக்காடு ரூட், சோமாலியா போய்விட்டு வந்ததுபோல் அலுப்பைத் தந்துவிடும். பீ கேர்ஃபுல்!

``இன்னொரு வழி இருக்கு பாஸ்’' என்றார் நம் புகைப்பட நிபுணர் விஜய். ஆனைக்கட்டி, அட்டப்பாடி, முக்காலி, மன்னார்காடு... அப்புறம் சைலன்ட் வேலி. ரூட் நீளமாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால், மன்னார்காடு வரை ஆக்ஸிலரேட்டர் மிதிக்கவே மனசுயில்லை. அத்தனை ரம்மியம். அம்புட்டும் மலைப்பாதை. இந்த நேரத்தில் கார்களில் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் இருந்தால், இன்னும் ஜாலி. ஸ்கார்ப்பியோ, ஹெக்ஸா, சஃபாரி போன்ற ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கொண்ட படா படா கார்கள், ஆஃப்ரோடுக்கு ஓகே-தான். ஆனால், மலைச்சாலையில் திருப்பி ஓட்ட எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்தான் நல்ல ஆப்ஷன்.

35 நிமிடத்தில் ஆனைக்கட்டி வந்திருந்தது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பினால், நீலகிரி பயோஸ்பியர் இயற்கைப் பூங்கா. பூச்சிகள், பறவைகள், பாம்புகள் என உயிரியல் பூங்காவாகவும் பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பச்சை நிறமே... பச்சை நிறமே!’ என்று மாதவன்போல் கத்திப் பாட வேண்டும்போல் இருந்தது. எங்கே திரும்பினாலும் பச்சை வாசம். பூக்களும் செடிகளும் சிரிப்பதுபோலவே இருந்தன. 25,000-க்கும் மேற்பட்ட செடி கொடி பூக்கள் இருப்பதாகச் சொன்னார்கள். பூக்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சின்ன... இல்லை பெரிய வித்தியாசம். ‘80 ஆண்டுகள் வாழும் மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான்; சில மணி நேரங்கள் மட்டுமே வாழும் பூக்கள் சிரித்துக்கொண்டே பிறக்கின்றன!’ (`சொல்வனம்' கவிதை ஆசிரியர், கவனிக்க...) உங்கள் வீட்டு வாண்டுகளுக்குச் சரியான ஆப்ஷன் இந்த இயற்கைப் பூங்கா. பூக்களோடு பூக்களாய் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

கவிஞனைத் தட்டித் தூங்கவைத்துவிட்டு, மறுபடியும் கார் இன்ஜினை உசுப்பினேன். அடுத்து, அட்டப்பாடி. கேரளாவுக்குள் வந்தாலே ஸ்வெட்டரை மறந்துவிடாதீர்கள். ‘கதவை மூடு; ஏ.சி வெளியில போகுது’ என்பதுதான் நெடுஞ்சாலை கார் பயணங்களுக்கான ஆகமவிதி. மலைச்சாலையில் நித்யானந்தாவை ஃபாலோ செய்வதுதான் பெஸ்ட். ‘கதவைத் திற; காற்று வரட்டும்!’ செம சில்னெஸ். கைகளைப் பரபரவெனத் தேய்த்து முகத்தில் வைத்தால், அடுத்த மைக்ரோ செகண்டில் மறுபடியும் சில்லென்றாகிவிடும் குளிர். வெளியே டெம்ப்ரேச்சர் 18 டிகிரி என்றது காரின் க்ளைமேட் கன்ட்ரோல் மீட்டர்.

சைலன்ட் வேலிக்கு பார்டர் ஏரியா இந்த அட்டப்பாடிதான். இதை ‘Buffer Zone’ என்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றும் சொல்லலாம். இந்த ரிசர்வ் ஃபாரெஸ்ட்டில் பழங்குடி இனத்தவர்கள் அதிகம் வசிப்பதாகச் சொன்னார்கள். ஆன்மிக அன்பர்களுக்கு ஓர் அன்புத்தகவல். இங்கு உள்ள செம்மனூர் மல்லேஸ்வரன் கோயிலில் சிவராத்திரித் திருவிழாவில், பழங்குடிகளுடன் ‘சூரியன்’ பட கவுண்டமணிபோல் ‘டண்டக்கு டண்டக்கு...’ என்று குத்தாட்டம் போடலாம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இது ஜெகஜோதியாக ஜொலிக்குமாம்.

இருட்டுவதற்குள் மன்னார்காடு போக வேண்டும். சைலன்ட் வேலி பயணம் மேற்கொள்பவர்கள், அட்டப்பாடியில் தங்குவதை சிபாரிசு செய்ய மாட்டேன். இங்கு காட்டேஜ்கள் இல்லை என்பது முக்கியக் காரணம். மன்னார்காட்டில் ரூம் புக் செய்திருந்தேன். இந்த மாதிரி நேரத்தில் ரூம்களை புக் செய்துவிட்டுப் பறந்தால்தான், ‘ஹேப்பி ஜெர்னி’யாக அமையும்.

மன்னார்காடு வருவதற்கும், சூரியன் ‘பை’ சொல்வதற்கும் சரியாக இருந்தது. இங்கு சீஸன் நேரம் என்பது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான சம்மர் நேரம்தான். மற்றபடி வீக் எண்டும் மன்னார்காட்டுக்கு சீஸன் டைம்தான். பாலக்காட்டில் இருக்கும் குட்டி நகரம் மன்னார்காடு. ‘தடுக்கி விழுந்தால் காட்டேஜ்கள்’ என்பதெல்லாம் இங்கே கிடையாது. புக் செய்த ரூமில் டிரெஸ் சேஞ்ஜ் பண்ணிவிட்டு, கால்நடையாகத் தேடிப் பார்த்தேன். மொத்தமே ஆறு முதல் ஏழு காட்டேஜ்கள்தான் கண்ணில் பட்டன. சீஸன் நேரம் இல்லை என்பதால், ``சேட்டா, ரூம் புக் வேணுமானு’’ என்று நான்-சீஸனில் கூவி அழைக்கும் பஸ் கண்டக்டர்கள்போல் கூவி அழைத்தார்கள் சேட்டன்கள். பூரம், சிவராத்திரி போன்ற திருவிழா நேரங்களில், இது அப்படியே உல்டாவாக மாறும். புள்ளகுட்டியோடு சென்று ‘ரூம் வேணும்’ என்று கதறினாலும், சேட்டன்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.

KFC தந்த பாதிப்போ என்னவோ, BFC, YFC என்று ஆல்ஃபபெட்டிக்கலாக ஃப்ரைட் சிக்கன் சென்டர்கள் இருந்தன. இப்போதெல்லாம் கேப்பைக் கூழ் சாப்பிடுவதைவிட KFC-ல் சாப்பிடுவதுதானே கெளரவம்!? கடலைக் கறியும் மீன் வறுவலும் சப்பாத்தியும் பெஸ்ட் போல் தோன்றியது. ஆனால், `இங்கு உள்ள ‘மலபார் சிக்கன்’ எனும் கோழி வெரைட்டியை ஒரு கை பார்க்கவில்லை என்றால், மலபார் பயணத்துக்கே அர்த்தம் இல்லை ப்ரோ' என்று சொன்னது மனம். நான் மனசாட்சிப்படி நடப்பவன். `மலபார் கறியை ஒரு கை பார்த்துவிட்டு, கடலைக் கறியைக் காலையில பார்த்துக்கலாம்’ என்று ஏ.சி இல்லாத ரூமில் குளுகுளுவெனத் தஞ்சம் புகுந்தேன்.

மன்னார்காட்டில் இருந்து சைலன்ட் வேலிக்கு 40 கி.மீ-தான். குண்டு குண்டான மலபார் அணில்கள், சிறுத்தைகள், புலிகள், யானைகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் என்று சைலன்ட் வேலியைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். நினைக்கும்போதே த்ரில்லிங்காக இருந்தது. கும்பிடப்போன தெய்வம்போல் குறுக்கே வந்த ஒரு கைடு, பிரயோஜனமான தகவலைச் சொன்னார். அதாவது, காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரைக்குள் மட்டுமே சைலன்ட் வேலிக்குள் அனுமதி. சோம்பேறித்தனம், கடலைக் கறி போன்ற ஆசைகளை டிஸ்லைக் செய்துவிட்டு, நல்லவேளையாக 8 மணிக்குள்ளாகவே சைலன்ட் வேலியில் டயர் பதித்தேன்.

வாசலில் ஓர் உணவகம் இருந்தது. பழங்களையும் இட்லிகளையும் விழுங்கிவிட்டுத் தெம்பாகக் கிளம்பினேன். ‘4 கி.மீ ட்ரெக்கிங் போகோணும்’ என்று எச்சரித்திருந்தார்கள். அதற்குத்தான் இந்த விழுங்கல். காருக்கு இனிமேல் வேலை இல்லை. இனி ஜீப் பயணமும் நடைப்பயணமும்தான்.

சைலன்ட் வேலிக்குள்ளே செல்பவர்கள், அலுவலகத்தில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஒரு ஜீப்புக்கு 1,500 ரூபாய். 5 பேர் வரை அனுமதி. இது இந்தியர்களுக்கான கட்டணம். வெளிநாட்டுக்காரர்களும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தனி ரேட்! ஒரு நாளைக்கு 10 ஜீப்புகளில் 50 பேருக்கு மட்டும்தான் அனுமதி. ஆபீஸ் போவதுபோல் லேட்டாகப் போனால், மன்னார்காட்டில் ரூம் வாடகையை அடுத்த நாள் வரை எக்ஸ்டெண்ட் பண்ணவேண்டியதுதான். நல்லவேளையாக, முதல் ஜீப்பே நான் புக் செய்ததுதான்.

இனிமேல்தான் ரியல் அட்வெஞ்சரே இருக்கிறது என்று பில்ட்-அப் கூட்டியிருந்தார்கள். சத்தியமாக பில்ட்-அப் கொடுக்கலாம். காட்டிலாகா அலுவலகமே மிரட்டலாக இருந்தது. அலுவலக வாசலில் ஒரு படம் மாட்டியிருந்தார்கள். அதாவது, புலி ஒன்று யானையை வேட்டையாடி தினமும் வந்து டின்னர் முடிப்பதை கேமராவில் ஃப்ரேம் செய்து மாட்டியிருந்தார்கள். பார்த்ததுமே கூஸ்பம்ப் அடித்தது. ‘‘காட்டைச் சுத்தி மொத்தம் 70 கேமராவுக்கு மேல் ஃபிட் செய்திருக்கோம்.’’ என்று ஒவ்வொரு நாளும் படம் பிடிக்கப்பட்டதை மானிட்டரில் காட்டினார் அதிகாரி ஒருவர். சிறுத்தைகள் ஃபேமிலியாகக் கூடி மகிழ்ந்தது, யானைகளின் ஜில் குளியல், வேட்டையாடப்பட்ட விலங்கைத் தின்ன போட்டி போட்ட மற்ற மிருகங்கள் என்று டிஸ்கவரி சேனல் பார்ப்பதுபோல் இருந்தது.

இங்கு உள்ள ஜீப் டிரைவர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாஷைகளும் தெரிந்திருக்கிறது. ‘‘ஞாம் இப்போ போப்போறது ரிசர்வ் ஃபாரஸ்ட்டானு’’ என்று மலையாளம் கலந்த தமிழில் நம் ஜீப் டிரைவர் வெளுத்துவாங்கினார். ‘ஜூராஸிக் பார்க்’ படத்தில் வருவதுபோல் ‘வெல்கம் டு சைலன்ட் வேலி’ என்று மரங்களால் செய்யப்பட்ட என்ட்ரன்ஸ் ஆர்ச்சே மிரட்டியது. ஜீப் பயணம் தொடங்கியது.

yt_middle


கேரளாவில் மனிதர்களைவிட காடுகளுக்கும் மிருகங்களுக்கும்தான் அதிக முக்கியத்துவம். இது சைலன்ட் வேலியின் அமைதியைப் பார்த்தாலே தெரியும். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், ஆபத்தான பொருள்கள், காட்டுக்குள் சத்தம் போடுதல், விலங்குகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பது என்று நாம் இங்கே ஃபன்னாக நினைக்கும் எந்த விஷயத்துக்கும் அனுமதியில்லை. கூடவே ஒரு கைடும் வந்திருந்தார். ‘‘நீங்க ஆபீஸ் வாசல்ல ஒரு படம் பார்த்தீங்கள்லானு... அது இவிடதான்!’’ என்று ஓர் இடத்தைக் காட்டினார் கைடு பழநி. புலி, யானையைக் குதறிப் போட்டு ருசி பார்த்த அதே இடம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடியதை ஆன் தி ஸ்பாட்டில் சாப்பிடுவதைவிட, ரத்தத்தை உறிஞ்சி இரையை அழுகவைத்து உண்பதைத்தான் விரும்புமாம். வேட்டையாடிய இரையை ஓர் இடத்தில் பாதுகாத்து வைத்துவிட்டு, ஒவ்வொரு நாளாக வந்து சாப்பிடுவதுதான் வாடிக்கையாம்.

சைலன்ட் வேலியின் கைடுகள், கிட்டத்தட்ட காட்டுவாசிகளாகவே வாழப் பழகியிருந்தார்கள். பழநியும் அப்படித்தான். கொடிய மிருகங்களைச் சந்திக்கும்போது எப்படி சாதுர்யமாகத் தப்பிக்க வேண்டும்... யானைகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் டிப்ஸ் கொடுத்துக்கொண்டே வந்தார். இன்னும் சிலருக்கு மோப்ப சக்திகூட இருப்பதாகச் சொல்லி கிலியூட்டினார். ‘இந்தப் பக்கம் சிறுத்தை இருக்கு. 500 மீட்டரில் யானை இருக்கு’ என்று ‘வேட்டையாடு விளையாடு’ கமல்போல துப்பறியும் கைடுகளெல்லாம் சைலன்ட் வேலிக்கு சிறப்பம்சம்.

சில இடங்களில் கேமரா ட்ராப் வைத்திருந்தார்கள். அசைவுகள் தெரிந்தால், அது உடனே கேமராவில் பதிவாகிவிடும். நான்கூட கேமராவில் பதிவாகியிருக்கலாம். 13 கி.மீ வரை செம டெரராக இருந்தது. சில இடங்களில் யானை பார்த்தோம். யானையும் எங்களைப் பார்த்திருக்கலாம். ‘சத்தம் போடாம வரணும்’ என்று எச்சரித்திருந்தார் பழநி.

ஜீப்பைவிட்டு இறங்கச் சொன்னார்கள். இனி ‘கோர் ஃபாரெஸ்ட்; வாகனங்களுக்கு அனுமதி இல்லை’ என்று அறிவித்திருந்தார்கள். இதுவரை வந்தது ரிசர்வ் ஃபாரெஸ்ட். நடைப்பயணம் தொடர்ந்தது. ‘ஏரியா சைலன்ட்டா இருக்கும்போல. அதான் சைலன்ட் வேலி’ என்று சைலன்ட் வேலியைச் சாதாரணமாக நினைத்துவிட்டேன். கண்ணை மூடி 30 விநாடி தியானம் செய்தால், எங்கோ ஒரு யானை கிளையை முறிக்கும் சத்தம் கேட்கலாம்; ஏதோ ஓர் இடத்தில் பட்டாம்பூச்சி சிறகு அசைப்பதைக்கூடக் கேட்கலாம். அப்படி ஓர் அமைதி. ‘சிக்காடா’ எனும் பூச்சி வகை, சைலன்ட் வேலியின் சொத்து. மிகக் குறைந்த டெசிபளில் இந்தப் பூச்சிகள் எழுப்பும் மெல்லிய சத்தம்கூடக் கேட்பதால், இதற்கு `சைலன்ட் வேலி' என்று ஆங்கிலேயர்கள் பெயர்வைத்தார்களாம். சைலன்ட் வேலியில் இசையமையப்பாளர்களுக்கு எக்கச்சக்க ரெஃபரென்ஸ் கிடைக்கலாம். ‘அமைதியாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது’ என்று என்னோடு வந்த ஒருவரும் கவிஞர் அவதாரம் எடுத்தார்.

பட்டர்ஃப்ளைதான் இங்கே மெயின் அட்ராக்‌ஷன் என்றார்கள். கலர் கலரான வண்ணத்துப்பூச்சிகள், சைலன்ட் வேலிக்குச் செம அழகு. செல்லும் வழியெங்கும் குட்டிக்குட்டி அருவிகள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவத்தன்மை இருப்பதாகச் சொன்னார் பழநி. கால் நனைத்து அதே தண்ணீரைச் சுவைப்பது செல்லமாக இருந்தது.

அருவி மற்றும் சுனைநீரைக் குடிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான டிப்ஸ்: ``காடுகளில் உள்ள சுனைகளில் நீர் அருந்தும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வளர்ச்சி அடையாத அட்டைப்பூச்சிகள் மூக்கு மற்றும் வயிற்றுக்குள் சென்றால்... வெளியே எடுப்பதற்குள் பெரும்பாடாகிவிடும்'' என்றார் பழநி.

மனதில் திடமும், கால்களில் உறுதியும் இருப்பவர்களுக்கான ட்ரெக்கிங் இது. கையில் ஒரு சிறு குச்சியுடன் நம்மைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தார் பழநி. ‘எந்த நேரத்துல எது வரும்னு தெரியாது. வந்தாலும் பிரச்னை இல்லை. நான் இருக்கேன்’ என்று தைரியம் சொல்லிய அவரது தன்னம்பிக்கைக்கு, `நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...' பாடலை ஏதாவது மியூசிக் சேனலில் டெடிகேட் செய்ய வேண்டும்.

அனகோண்டா, ஜங்கிள் புக் பட ஸ்க்ரீனுக்குள் புகுந்து புறப்படுவதுபோலவே இருந்தது. செல்லும் வழியில் 500 வயதான மரமெல்லாம் காட்டினார். சில மரங்களின் பட்டைகளுக்கு, கேன்சரைக் குணமாக்கும் சக்தி இருக்கிறதாம்.

திடீரென ஓர் இடத்தில் ஏதோ கால் தடங்களை ரெஃபர் செய்தவராக நம்மை அலெர்ட் செய்தார். ‘‘இந்த இடத்துல 1,500 கிலோ எடைகொண்ட காட்டெருமைங்க கூட்டத்தோடு போயிருக்குங்க!’’ என்று கிலி ஏற்படுத்தினார். அந்தக் கால் தடங்களின் அழுத்தத்தை வைத்து அவர் எடையைச் சொன்னது அவரின் காட்டுத்தனமான எக்ஸ்பீரியன்ஸைக் காட்டியது. ‘படிக்காதவன்’ படத்தில் வில்லனிடம் அடி வாங்கப்போகும் விவேக்போல் மாறியது எனது மூஞ்சி. விசித்திரமான ஒலி எழுப்பியபடி முன்னே போனார் பழநி. காட்டு மாடுகள் கூட்டம் விலகிச் செல்வதற்காகவாம்.

சைலன்ட் வேலிக்கு ஒரு முக்கியமான பெருமை என்னவென்றால், கேரள காட்டு யானைகளின் வழித்தடத்தின் கடைசி எல்லை இதுதான். அதனால், முன் அந்தி நேரங்களில் எல்லா யானைகளும் இங்கேதான் சந்திக்குமாம். இங்குள்ள ‘வாட்ச் டவர்’தான் நமக்கான எல்லை. இந்த டவரில் ஏறி நின்று மொத்தக் காட்டின் அழகையும் ரசிப்பதற்கு, தைரியம் கலந்த ரசனை வேண்டும். ``மாலை நேரத்தில் இந்த டவரில் ஏறி நின்றால், கிட்டத்தட்ட 600 முதல் 1000 யானைகளை மொத்தமாகப் பார்க்கலாம்'' என்று அவர் சொன்னபோது, புல்லரிக்காதவர்கள் மனிதர்களே இல்லை. ‘‘இங்கேதான் எல்லாமே தண்ணி குடிக்க வரும்ங்க!’’ என்று ஓர் நீரோடயைக் காட்டினார்.

இந்த டவரில் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுவதாகச் சொன்னார். அப்படியே கிடைத்தாலும், இங்குள்ள டெரர் சூழ்நிலை காரணமாக, ஒன்றிரண்டு வாரங்களுக்குமேல் யாரும் தாக்குப்பிடிப்பதில்லையாம். கடைசியாகச் சேர்ந்த செக்யூரிட்டி ஒருவர், காலை தூக்கக்கலக்கத்தில் பல் தேய்த்து சிறுத்தையின் முகத்தில் எச்சில் துப்ப, கடுப்பான சிறுத்தைக்குப் பயந்து டவரின் மேலேயே மணிக்கணக்கில் இருந்த செக்யூரிட்டியின் கதை, சிரிப்பாகவும் திகிலாகவும் இருந்தது.

திகில் செல்ஃபிக்கள் எடுத்த பிறகு, மீண்டும் ரிட்டர்ன் பயணம். அதே வழித்தடம். இந்த முறை, எங்கேயாவது எங்கள் கால் தடங்களைப் பார்த்து மாடுகளோ, யானைகளோ அலெர்ட் ஆகியிருக்கலாம். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம். தாயின் கருவறையைப்போல் அத்தனை சுத்தமான ஒரு சுவாசத்தை அனுபவித்த பிறகு, மீண்டும் காரில் கால் வைக்க மனமே இல்லை.

பயம் மொத்தமும் கலைந்து மனதில் இப்போது ஒரு பெருமை ஏற்பட்டது. ‘மனிதர்களைவிட விலங்குகளுக்கும் காடுகளுக்கும் கேரளா முக்கியத்துவம் தருகிறது’ என்று சொன்னதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. இந்த இடத்தில் ‘இடுக்கி’ போன்ற பிரமாண்டமான அணை கட்டுவதற்காக பாறைகளை வெடி வைத்துத் தகர்த்தபோது, விலங்குகளுக்கும் மரங்களுக்கும் சேதம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று அந்தத் திட்டத்தையே பாதியில் விட்டுவிட்டதாம் கேரள அரசு.

மனிதர்களின் பேராசைக்கு இலக்காகாமல், அமைதியாக இருக்கும் அமைதிப் பள்ளத்தாக்கு ஒருவகையில் உங்கள் தேடலுக்கு முடிவாகக்கூட இருக்கலாம். இப்போது, காட்டைப்போல் மனதும் அமைதியாக இருந்தது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

fb_right
Twitter_Right
Telegram_Side
mobile_App_right
Insta_right