முழுநேர போலீஸ்... பகுதிநேர இயக்குநர்... கோவையைக் கலக்கும் ராக்கி மகேஸ்!

“தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துகளால், நான் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தேன். அதனால்தான், விழிப்பு உணர்வு குறும்படங்களை இயக்கி வருகிறேன்'' இப்படிச் சொல்பவர் ஒரு சமூக ஆர்வலர் இல்லை... கோவை டிராஃபிக் போலீஸான ராக்கி மகேஸ்.
ரியலிலும், ரீலிலும் நாம் எத்தனையோ வித போலீஸ்களைப் பார்த்திருப்போம். ஆனால், அவர்களிடமிருந்து சற்று ஒதுங்கி, துப்பாக்கிகளுக்கும், லத்திகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, கேமராவுடன் விழிப்பு உணர்வு குறும்படங்களை எடுத்துவருகிறார் ராக்கி மகேஸ் என்ற கோவை டிராஃபிக் போலீஸ்.
ராக்கி மகேஸிடம் பேசினோம், “சின்ன வயசுலருந்தே சமூகப் பணிகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கீழ் ஓர் அங்கமாக இருக்கும், நேரு யுவகேந்திரா அமைப்பில் இருந்தேன். சமூகம் குறித்தப் பார்வையை நான் அங்குதான் கற்றேன். அப்போதே, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, சேலத்திலிருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணம் செய்தோம்.
போலீஸ் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி, பஸ்ல கண்டக்டராகவும், டிரைவராகவும் இருந்தேன். அந்த நேரத்துல, நிறைய கதைகள் எழுதுவேன். டிராமா போடுவோம். எம்.ஏ போலீஸ் அட்மினிஸ்ட்ரேசன் படிச்சேன். 1994 ஆம் ஆண்டு போலீஸ்ல சேர்ந்தேன். போலீஸ்ல சேர்ந்த அப்பறம், நான் எழுதின கதைகளை புக்கா ரிலீஸ் பண்ணோம். ‘புகுந்த வீட்டைப் புரிந்துகொள் மருமகளே’ என்ற சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டோம்.

நான் எழுதின கதைகளைக் குறும்படமாக எடுக்கத் தொடங்கினேன். மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் மேல எனக்குப் பெரிய மரியாதை இருக்கு. அவரோட ஆலோசகர் பொன்ராம் எனக்கு நீண்ட கால நண்பர். அதனால, கலாம் ஐயாவைப் பார்க்கற வாய்ப்பு கிடைச்சுது. என்னோட புக்க அவர்கிட்ட காட்டினேன். அவருக்குப் புடிச்ச ஒரு கதையத்தான், ‘பிஞ்சு மனசில’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்தேன். நாட்டில் முதியோர் இல்லங்களே இருக்கக்கூடாது. பெத்தவங்கக்கிட்ட எப்படி நடந்துக்கணும்ங்கறதப் பத்தி அதுல பேசியிருந்தோம்.
அதுக்கப்பறம், ‘இதுதாண்டா போலீஸ்’, ‘இது தகுமா’ என 8 குறும்படங்கள் எடுத்துருக்கேன். தொடர்ந்து படங்கள் எடுக்கறதப் பார்த்துட்டு, எங்க டிப்பார்ட்மென்ட்லயே, என்னைய விழிப்பு உணர்வு படம் எடுக்கச் சொன்னாங்க. டிப்பார்ட்மென்ட்டுக்காக 4 விழிப்பு உணர்வு படங்கள் எடுத்துட்டேன். அதுல ‘அவர் வருவாரா?’ என்ற போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்த விழிப்பு உணர்வு குறும்படம், கோவை மாவட்டத்துல இருக்கற தியேட்டர்கள்ல ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இது தகுமா என்ற குறும்படத்தை இந்தில டப்பிங் பண்ணிருக்காங்க. என்னோட படங்கள் குறும்பட திருவிழாவுலயும் கலந்துருக்கு. இதுவரைக்கும் 8 விருதுகள் கிடைச்சுருக்கு. இருக்கற பணிச் சூழ்நிலையில, நம்ம டிப்பார்ட்மென்ட்ல படம் எடுக்க விடறதே பெரிய விஷயம். அதனால, வருஷத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்றதுணு டார்கெட் வெச்சுட்டு ஓடிட்டு இருக்கேன். என்னோட படங்களுக்கு நானே ஸ்க்ரிப்ட் எழுதி, டைரக்ட் பண்ணிடுவேன். கேமரா, எடிட்டிங், ஆக்டிங் ஏரியாக்களுக்கு தனியா டீம் வெச்சுருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. என் பெரிய பையன் மனோஜ் காலேஜ் படிச்சுட்டே, எனக்கு அசிஸ்டென்ட் டைரக்டராக உதவி செஞ்சுட்டு இருக்கான். சுமார் 50 கதைகள் எழுதி வெச்சுருக்கேன். ரிட்டையர் ஆனதுக்கு அப்பறம், கிராமத்து மண்வாசனை சார்ந்த படங்களை பண்ணணும்னு ஆசை” என்று முடித்தார்.
தான் எடுக்கும் அனைத்துப் படங்களிலும் கே.எஸ்.ரவிக்குமார் பாணியில், ஒருரோலில் தலை காட்டுவது ராக்கி மகேஸின் ஸ்டைல்

Similar Post You May Like
-
கோவையில் ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்
Fri, May 15, 2020 No Comments Read More...கோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.
-
உழைப்பால் உயர்ந்த அப்பநாய்க்கன்பட்டி புதூர் வேலுமணி -
கோவை அருகே ஏழை விவசாயியின் மகனாக பிறந்த வேலுமணி, மும்பை சென்று வாழ்க்கையை தொடங்கி, பல சவால்களைத் தாண்டி மாபெரும் வளர்ச்சி அடைந்த கதை! நம் உடலில் வெறும் 15 முதல் 20 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சிறி
-
முக்கால் ஏக்கர் நிலத்தில் 30 வகை காய்கறிகள்... இயற்கை விவசாயத்தில் அசத்தும் கோவை கல்லூரிப் பேராசிரியர்!
இன்றைய தேதியில் விஷமில்லா காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துவருகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதேசமயம் இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் எல்லாம் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி விளை
