மூன்று நண்பர்கள் கோவையில் தொடங்கிய மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் ‘மெட்ஸ்பி’

 Friday, November 22, 2019  06:30 PM   No Comments

ஒரு குறுகலான சந்திற்குள் இருக்கும், ஒரு குட்டி அறையில் அமர்ந்துக் கொண்டிருக்கும் மூன்று இளைஞர்கள் பத்தாயிரம் ரூபாய் முதலீடுடன் தொடங்கிய தொழில்நுட்ப முன்முனைவின் மூலம் பன்னிரெண்டு லட்சம் ஈட்டியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு அசாதாரண முன்னேற்றக் கதை அது.

'மெட்ஸ்பி' (Medsby) நிறுவனர், குரு பிரசாந்த் தன்னைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார், “லோவர் மிடில் கிளாஸ் குடும்பம் தான் எங்களுடையது. அப்பா குருசாமி கண்டக்டர், அம்மா மங்களம் வீட்டில் இருந்தாங்க. காரமடையிலிருந்து இருந்து தினமும் காலேஜுக்கு வருவது ரொம்ப சிரமமாய் இருந்ததால அம்மாவும், தம்பியும் என்னோட சேர்ந்து, காலேஜ் பக்கத்துலயே ஒரு சின்ன வீடு எடுத்து தங்குனாங்க. அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்காததால் தனியா இருந்தார். நாங்க புது ரூமூக்கு வந்த ராத்திரி முழுக்க தூங்கவே இல்ல, சுத்தி நெறைய எலி ஓடிட்டே இருந்தது. எனக்காக, அம்மா நிறைய தியாகம் பண்ணிருக்காங்க. நான் ’மெட்ஸ்பி’யை தொடங்குறேன்னு சொன்ன போதும் என் மேல நம்பிக்கையா தான் இருந்தாங்க.”

மெட்ஸ்பி-தொழில்நுட்பத்தின் மூலம் அறிவியல் படிப்புகளையும் ஆய்வுகளையும் எளிமையாக்கும் நிறுவனம். நோயாளிகள் அணிந்துக் கொள்ளக்கூடிய, தானியங்கி நோயாளி கண்காணிப்பு செயலி. இது தான் குருபிரசாந்த் இன் பொறியியல் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் போது செய்த முதல் புராஜெக்ட். அது வெற்றிகரமாக அமையவே, இனி தொழில்நுட்பத்தில் தான் தனது எதிர்காலம் என்று முடிவு செய்தார். சில போட்டிகளில் வென்றதன் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு, கல்லூரியின் மூன்றாமாண்டு படிப்பின் போது தொடங்கிய நிறுவனம் தான் ‘மெட்ஸ்பி’.

பல்ஸ்கிட் - இதயத் துடிப்பை அளவிடும் கருவி, இ.சி.ஜி கிட் என மெட்ஸ்பி நிறுவனத்தின் தயாரிப்புகளின் வாடிக்கையாளர் வட்டம் கோவையில் இருக்கும் தொழில்நுட்பக் கல்லூரிகள், பி.எஸ்.ஜி மருத்துவமனை எனத் தொடங்கி, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் வரை விரிகிறது. இவற்றில் மிக முக்கியமானது, டிஜிட்டலில் இருக்கும் எக்ஸ்-ரேக்களை, 3டி அச்சாக மாற்றி, அதைக் கொண்டு இம்ப்ளாண்டுகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் திட்டமிடுவது. இதை நடைமுறைப்படுத்துதலின் மூலம், மருத்துவத்துறையில், முன்பை விட மிகத் துல்லியமாக செயல்பட முடியும் என்பது தனிச்சிறப்பு.
இணை நிறுவனர்கள்

மெட்ஸ்பியின் இணை நிறுவனர்கள், நாரயணன் மற்றும் நந்தினி சுரேஷ். நந்தினியும், குருபிரசாந்தும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். சென்னையை சேர்ந்த நாராயணணின் குடும்பம் விவசாயத்தை சார்ந்து உள்ளது. நந்தினிக்கு பல பெரிய நிறுவனங்களிலிருந்தும் வேலைக்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலுமே, இருவரும் தத்தம் கனவுகளை பின்தொடர, பெற்றொர்கள் தடையாய் இருந்திருக்கவில்லை. வழிகாட்டுதலுக்கு யார் இருந்தார்கள் எனக் கேட்டால், மூவரும் சேர்ந்து கைக்காட்டுவது, அவர்களுடைய கல்லூரியின் பயோ மெடிக்கல் துறையின் தலைவர், திரு லக்ஷ்மி தீபா அவர்களை.

“கடந்த ஒரு வருடமாக ‘மெட்ஸ்பியுடன்’ கல்வியாளராகவும், நிர்வாகியாகவும் இணைந்து இருக்கிறேன். மெட்ஸ்பியின் உதவியுடன் ஆய்வுக்கூடப் பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். ‘மெட்ஸ்பி’ குழுவின் தொலை நோக்குப் பார்வையும், தொழில்நுட்ப அறிவும் யாரையுமே ஈர்க்கக்கூடியது தான். சிக்கலுக்குரியவைகளை புதுமையுடன் கையாண்டு, அதற்கான தீர்வை நியாயமான விலையில் உருவாக்குவதை தான் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொழில் துறைக்கு தயாராக இருக்கும் மாணவர்களை உருவாக்க, ஆசிரியர்களுக்கு உதவும் ‘மெட்ஸ்பி’ நிறுவனம், உண்மையிலேயே இப்பொழுதின் தேவை தான் ” என்கிறார் லஷ்மி தீபா, பெருமையாக.வெற்றியும் போராட்டமும்

2014ல் மெட்ராஸ் ஐ.ஐ.டியில் ‘பிசினஸ் பிட்ச்’ போட்டியில், மெட்ஸ்பி வென்றது மிகப் பெரிய ஊக்கமாய் இருந்திருக்கிறது. ‘தானியங்கி உடல்நல கண்காணிப்பு அமைப்பு மற்றும் முறை’க்காக பேட்டண்ட் உரிமம் பெற இருப்பது, கல்லூரிகளில் பயோ மருத்துவ பரிசோதனைக்கூடங்கள் அமைத்திருப்பது, நவீன தொழில்நுட்பங்கள் பற்றி கல்லூரிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என நீள்கிறது மெட்ஸ்பியின் முன்னேற்றப் பட்டியல்.

போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை. நிறுவனம் தொடங்கப்படும் முன்னர், குருபிரசாந்திற்கு பதிமூன்று அரியர்கள் இருந்திருக்கின்றன, ஆனால் அவர் இன்றோ ஒரு வெற்றிகரமான தொழில் முனைவர். மெட்ஸ்பி தொடங்கி; “எங்களுக்கு முதல் புராஜெக்ட் ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து கிடைத்தது. ஒரு ‘மாடல்’ செய்து விளக்கிக் காட்டினோம். அவர்களுக்கும் அது பிடித்துப் போகவே, ஒரு மாதம் முழுக்க உழைத்து அந்த ‘மாடலை’ செய்து முடித்தோம். ஒரு புதிய நிறுவனம் தானே என்று நினைத்து, அவ்வளவு பெரிய புராஜெக்ட்டிற்கு எங்களுக்குக் குறைவான கட்டணம் கொடுப்பதாக சொன்னார்கள். அப்போது எல்லாம் நானும், நாரயணனும் கோவையின் எல்லையில் இருக்கும் அந்த இடத்திற்கு தினமும் பஸ்ஸில் போவோம். சில சமயம், பஸ் செலவைக் குறைக்க நான்கைந்து கிலோமிட்டர் தூரம் வெயிலில் நடந்ததும் உண்டு.

ஒரு முறை, ஒரு எக்ஸ்போவின் போது இன்னொரு பயோ மெடிக்கல் நிறுவனத்தின் தலைவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே ‘முதலீடு எவ்வளவு’ என்பது தான். அந்த குரல் என்னை என்னவோ செய்தது. ஐம்பதாயிரம் என பொய் சொன்னேன். அதற்கு அவர், ‘யார் வேண்டுமானாலும் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்யலாம், அது சுலபமானது, ஆனால், எல்லாராலும் லாபம் ஈட்ட முடியாது’ என்றார்” என்று நினைவுகூறும் குருபிரசாந்த், இன்று தன்னை நிரூபித்தும் உள்ளார்.

டிஜிட்டல் வடிவம் சமூகநோக்கு :

“3டி பிரிண்டிங் மூலம், செயற்கை கைகள் தயாரிப்பதாய் திட்டம் இருக்கிறது. முதலில் அதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் என விலை நிர்ணயம் செய்தி்ருந்தோம். பின், அதை இலவசமாக செய்வதாகவே முடிவு செய்திருக்கிறோம். இதைப் போலவே பலத் துறைகளில் சமூக சேவை செய்யும் எண்ணமும் இருக்கிறது” என்னும் குருபிரசாந்த், இளைஞர்களுக்கு சொல்வது, “தாராளமாக, தொழில் முனைவை நோக்கிப் போகலாம். மிகச் சிறப்பான எதிர்காலம் அதில் இருக்கிறது”.

“எதுவும் செய்ய முடியும், எல்லாம் செய்ய முடியும்” என்னும் விவேகானந்தரின் சொற்கள் தனக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிப்பதாய் குருபிரசாந்த் சொல்லும் போது நந்தினி சிரித்துக் கொண்டே, “ஆமா, எப்பவும் இதையே தான் சொல்லிட்டு இருப்பார்” என்கிறார்.

-- நன்றி https://tamil.yourstory.comSimilar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right