3 மாவட்டங்களின் விவசாயத்தை காக்கும் சோலையார் அணை - ஒரு பார்வை

 Sunday, December 15, 2019  04:30 PM   No Comments

சோலையார் அணை - வால்பாறையில் இருந்து 20 km தொலைவில் அமைந்துள்ளது. இது கோயம்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை மலையில் உள்ள ஒரு மலை வாழிடம் ஆகும். தமிழக நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதி இங்கு இயங்குகிறது, இந்த அணையைப் பார்க்க சிறப்பு அனுமதி தேவை.

வால்பாறை பொள்ளாச்சியில் இருந்து 64 km (40 mi) மற்றும் கேரளா மாநிலம் சாலக்குடியில் இருந்து 55 கிலோமீட்டர் (34 மைல்) அமைந்துள்ளது. சோலையார் அணை, பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக உள்ளது. இதன் நீர் சேமிப்பு திறன் 160 அடி (49 மீ). இந்த நீர்த் தேக்கத்தில் நிரம்பி வழியும் நீர் பரம்பிக்குளம் நேர்த்தேக்கதை அடைகிறது. இந்த அணை அப்பகுதியில் புகழ்பெற்ற பொறியாளரான திரு. கே. பழனிசாமி அவர்களின் தலைமையின் கீழ் பணிபுரிந்த அணியினால் கட்டப்பட்டது.

வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிடைக்கும் தென்மேற்கு பருவமழை, அக்டோபர் இறுதியிலிருந்து ஜனவரி மாதம் வரை கிடைக்கும் வடகிழக்கு பருமழை ஆகிய பருவ மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீர் முழுவதும் இந்த சோலையார் அணைக்கு வந்து சேருகிறது.

160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக்கொண்டு சோலையார் மின் நிலையம் 1 மற்றும் இரண்டு ஆகிய மின் நிலையங்கள் இயக்கப்பட்டு 95 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்நிலையம் ஒன்றில் மின் உற்பத்திக்குப்பின் வெளியாகும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும், இரண்டில் மின் உற்பத்திக்குப் பின் வெளியாகும் தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கும் திறந்துவிடப்படுகிறது.

ஆண்டு முழுவதும் அணையில் தண்ணீர் தேக்கிவைக்கப்படுவதால் எப்போதும் அணையில் தண்ணீர் இருந்து கொண்டேயிருக்கும். வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் எங்கு மழை பெய்தாலும் அந்த தண்ணீர் முழுவதும் வீணாகாமல் அணைக்கு வந்து சேரும்படியாக அணையின் அமைப்பு இயற்கையாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அணைக்கு தண்ணீர் வழங்குவதற்கு நீரார் பகுதியில் நீரார் அணையும், சின்னக்கல்லார் பகுதியில் சின்னக்கல்லார் அணையும் அமைந்துள்ளது. இந்த 2 அணைக்கட்டுகள் அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் தண்ணீர் முழுவதும் இந்த அணைகளில் இருந்து சுரங்கக் கால்வாய்கள் மூலம் சோலையார் அணைக்கு வந்து சேருகின்றன. அதே போல நடுமலை ஆறு, சோலையார் சுங்கம் ஆறு, பன்னிமேடு ஆறு, இஞ்சிப்பாறை சுங்கம் ஆறு, இது தவிர குரங்குமுடி, பன்னிமேடு பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் நீரோடைகளின் தண்ணீர் ஆகியவை இந்த சோலையார் அணைக்கு வந்தடையும்.

சோலையார் அணையின் பாதுகாப்பிற்காக சேடல்பாதை என்ற ஒரு வசதியும் உள்ளது. அதிகளவு தண்ணீர் வரும் காலங்களில் அணையின் முழு கொள்ளளவான 160 அடியை தாண்டி தண்ணீர் வரும் போது தானாகவே அணையின் தண்ணீர் சேடல் பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு சென்று விடும் அதையும் தாண்டி வெளியேறும் தண்ணீரின் அளவைவிட உள்ளே வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்குமானால் அணையில் உள்ள 3 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.இந்த அணையிலிருந்து ஆண்டு தோறும் 12.5 டிஎம்சி தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு வழங்க வேண்டும. அதன்படி தமிழக கேரள எல்லைப்பபகுதியில் அமைந்துள்ள கேரள சோலையார் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அதிக மழை காலங்களில் முடிந்த வரை வழங்கப்படும் குறைவான மழை கிடைக்கும் போது குறைவாகவும் தண்ணீர் வழங்கப்படும் எப்படியும் ஒப்பந்தப்படி வழங்கவேண்டிய தண்ணீர் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு விடும்.

பொதுப்பணித்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த சோலையார் அணை அமைந்துள்ளதால் தான் அரசு துறைகள் சார்பில் வால்பாறை பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த சோலையார் அணையின் தண்ணீர் மூலம் தான் பொள்ளாச்சி வட்டார பகுதி மக்களின் குடிதண்ணீர் தேவைகள், விவசாயத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அணையின் தண்ணீர் தான் ஆழியார், திருமூர்த்தி துணக்கடவு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கும் தண்ணீர் ஆதாரமாக விளங்குகிறது.

வால்பாறையில் முக்கியமாக நடுவாறு, சோலையாறு என்ற இரண்டு ஆறுகள் உள்ளன. அதில் சோலையார் அணை நிரம்பியதும், அது பரம்பிக்குளத்திற்கு வருகிறது. எஸ்டேட்டுகளுக்கு 30 சதவீதம் போக மீதி நிலங்களை எல்லாம் காடுகளுக்கே விட வேண்டும் என்பது பிரிட்டீஷார் பாலிஸியாகவே இருந்தது.

இயற்கைக்கு எதிராக மனிதத் தேவைக்கு நீராதாரங்கள், மின்சாரம் போன்ற கட்டுமானங்களை உருவாக்குவது எல்லாம் காட்டு விலங்குகளுக்கும், அவற்றின் நாடியாக விளங்கும் காடுகளுக்கும் சேதமில்லாமல், இயல்பு மாறாமலே ஏற்படுத்த வேண்டும் என்பது கூட அவர்களின் திட்ட வரையாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறியே கட்டுமானங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. கோவை காடுகளைப் போல அல்லாவிட்டாலும், நீலகிரி காடுகளைப் போல கான்கிரீட் காடுகளாக மாறாவிட்டாலும், மனிதத்தேவைக்கான மின்சாரம், நீர்த்தேவை, பாசனத்திட்டங்கள் இங்குள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், காடாம்பாறை, சோலையாறு அணைகள் மூலமாகவே உருவாக்கப்பட்டள்ளது. அதிலும் ஆசியாவிலேயே பெரிய திட்டமான பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் காண்டூர் கால்வாய் எல்லாம் மலைகளை குடைந்தே அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை வளப்படுத்தும் இந்த திட்டம் கிட்டத்தட்ட 4 லட்சம் ஏக்கருக்கு பயனாவதாக கோடிட்டுக் காட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலின் நீளம் மட்டும் சுமார் 49.3 கிலோ மீட்டர் ஆகும். வால்பாறை மலைப்பிரதேசத்தில் கேரள எல்லை்பகுதியில் அமைந்துள்ள நீராறு அணையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலையாறு அணைக்கு நீர் வந்து அங்கிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரம்பிக்குளம் அணைக்கு வருகிறது.

அதன் பிறகு அதே நீர் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூணக்கடவு வந்து, அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆழியாறு அணை வந்து சேருகிறது. அங்கிருந்து திருமூர்த்தி அணைக்கு சுரங்க வழியில் செல்கிறது. ஆழியாறு அணைக்கும், திருமூர்த்தி அணைக்கும் இடைப்பட்ட தூரம் 29 கிலோமீட்டர் ஆகும். இந்த நீர்ப்பாதையின் மொத்த தூரமான 120 கிலோமீட்டரில் கேரளப் பகுதிகளை கழித்தது போக 49 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் மூலமும், மலைகளை குடைந்தெடுத்த சுரங்கப்பாதைக் கால்வாய்கள் மூலமும்தான் (16 அடி விட்டம் உள்ளவை) நீர் பயணம் செய்கிறது.

இதன் பிறகே ஒப்பந்தப்படி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசனப் பரப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த மெகா பிராஜக்ட் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1963. பரம்பிக்குளம் அருகே உள்ள சர்க்கார்பதி நீர்மின் நிலையத்தில் ஆண்டொன்றுக்கு 22 டிஎம்சி நீர் திறந்து விடப்பட்டால் குறைந்தபட்சம் 19 டிஎம்சி நீர் திருமூர்த்தி அணைக்கு சென்று சேர்கிறது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right