நமது பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் காக்கும் காப்பு கட்டுதல் பற்றி சொல்லித்தருவோமே...

 Tuesday, January 14, 2020  12:09 PM   No Comments

தை முதல் நாள் பிறப்பதற்கு முந்தைய நாள் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழங்காலங்களில் எல்லாம் நம் முன்னோர்களிடம் பணப்புழக்கம் என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்காது. அதாவது தை மாதம் பிறக்கும் போது அறுவடை செய்து அதில் கிடைக்கும் வருமானம் தான் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானமாக இருக்கும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயம் எந்தவித வளர்ச்சியும் அடையாத காலம். மக்களுக்கு விவசாயம் தான் வருமானம்.

விவசாயிகள் எல்லாம் பனை ஓலை வீடுகளிலும், தென்னை ஓலை வீடுகளிலும் தான் வசித்தார்கள். இப்படிப்பட்ட வீடுகளை எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க பணமும் தேவை. தை மாத தொடக்கத்தில் தான் அறுவடை செய்து பணப்புழக்கம் அதிகமாக கைக்கு வரும். அறுவடை செய்து வரும் வருமானத்தை வைத்து தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்ள தைமாத தொடங்குவதற்கு முன்பு தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொண்டனர்.

புதியதாக மாற்றப்பட்ட குடிசைகளுக்கு வர்ணம் தீட்டி, காவி தீட்டி அழகுபடுத்திக் கொள்வார்கள். காவி தீட்டுவது என்பது நம் வீட்டிற்குள் பூச்சி பொட்டுகள் அண்டாமல் இருப்பதற்காகவே. வீடுகளில் இருந்து நீக்கப்பட்ட பழைய ஓலைகளை என்ன செய்வது? இந்த ஓலையுடன் சேர்த்து, வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் ‘போக்கி’ விடவேண்டும் என்பதற்காக, ‘போகி’ தினத்தன்றே எரிக்கும் வழக்கத்தை கொண்டுவந்தார்கள். அந்த காலத்திலெல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் அந்த சூரிய பகவானுக்கும், வருண பகவானுக்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்த இந்த நாள் தான் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இப்பேற்பட்ட தைத்திருநாளை வீட்டில் இருக்கும் அனைவரும் நோய் நொடியில்லாமல், ஆரோக்கியமாக, சந்தோஷமாக கொண்டாடப்பட வேண்டியது அவசியம் என்று கருதிய நம் முன்னோர்கள் இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக, பண்டிகை தொடங்குவதற்கு முன், போகி அன்று செய்யக்கூடிய ஒரு சடங்குதான் இந்த காப்பு கட்டுதல்.

yt_middle


இதில் மாஇலை, வேப்பிலை, சிறுபீளை, தும்பை இலை, கருந்துளசி, ஆவாரம்பூ, இவைகளை சேர்த்து ஒரு கொத்தாக கட்டி நம் வீட்டு வாசலில் வைக்கும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். வேப்பிலை காற்றில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் கிருமி நாசினி. மாஇலை உடல் களைப்பை நீக்கும். சிறுபீளை நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். தும்பை வாசம் தலைவலியை போக்க கூடியது. துளசியின் மகிமை பற்றி நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான் அந்த மகாலட்சுமியின் அம்சம். அதுமட்டுமில்லாமல் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது கருந்துளசி.

நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக தான் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நம் வீட்டு வாசலில் கட்டி வந்தார்கள் நம் முன்னோர்கள். அதுமட்டுமல்லாமல் ஆன்மீகரீதியாக வேப்பிலை, மாஇலை கட்டி உள்ள வீட்டுக்குள் கெட்ட சக்தியானது அண்டாது என்பது நம் நம்பிக்கை. வரப்போகும் நோயை, முன்னதாக தடுப்பதற்காகவும் என்றும் கூறலாம். ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதில் இருக்கும் தாவரங்களை எடுத்து மருந்தாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது புரிந்திருக்கும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில் நம் நடந்து சென்றாலே போதும். நமக்கும், நமக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கும் பிற்காலத்தில் எந்தவிதமான பிரச்சனையும் வராது. தற்சமயம் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு காரணம், நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாம் கடைப்பிடிக்காமல் இருப்பது தான்.

இந்த பொங்கலில் இருந்து நம் பிள்ளைகளுக்கு முன்னோர்களின் பழக்கவழக்கங்களை சொல்லித் தருவோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டு இந்த தைத்திருநாளை கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


yt_custom

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
Twitter_Right
Insta_right
fb_right
mobile_App_right