புறக்கணிக்கப்பட்ட சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்!

 Wednesday, September 2, 2020  01:30 PM   No Comments

தன்னிடம் இல்லாத, பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மொழி, அழிவதில்லை; ஆனால், தன்னிடம் இருக்கும் சொற்களை துறந்து, பிற மொழி சொற்களை ஏற்றுக்கொள்ளும் மொழி, விரைவில் அழிந்துவிடும்.எந்த மொழியும், தானாய் வளர்வதும், தேய்வதும் இல்லை; அதை பயன்படுத்துவோரின் சூழலை சார்ந்திருக்கிறது.

கடந்த, 2008ம் ஆண்டு, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வாழ்ந்த, மரியா ஸ்மித் ஜோன்ஸ், 89, என்ற மூதாட்டி இறந்தார்; அவரின் மரணத்தோடு, 'இயாக்' என்ற மொழியும் மரித்துப் போனது.அந்தமான் தீவில், பல நுாற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்த, 'போவா' இனத்தின் கடைசிப் பெண்ணான போசெர், 2013ல் மரணமடைந்தார். அந்த பெண்ணின் உடலோடு, போவா மொழியும் புதைந்து போனது.இன்னும் இது போல, பல மொழிகள் அழிவின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கின்றன.'இந்த பூமியில், 6,000 மொழிகள் உள்ளன; இன்னும், 100 ஆண்டுகள் கழித்து, வெறும், 600 மொழிகள் தான் இருக்கும்; 5,400 மொழிகள் அழிந்து போகும்' என, ஐ.நா.,வின் மொழியியல் ஆய்வுத் துறை அச்சம் தெரிவித்துள்ளது.எழுத்து, ஒலி, சொல் ஆகியவற்றில் மாற்றங்களை அவ்வப்போது சந்தித்து தான், மொழிகள் யாவும் உயிர் வாழ்கின்றன. மாற்றங்களை ஏற்காத மொழி, இன்றைய யுகத்தில் நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை என உறுதியாக கூறலாம்.

ஒரு மொழியின் அழிவு, அந்த இனம் இந்த பூமியில் இருந்தது என்பதற்கான வரலாற்றின் அழிவு அல்லவா!தமிழ் மொழியைப் பொறுத்த வரை, உரைநடைக்கும், பேச்சு வழக்கிற்கும் எண்ணற்ற மாறுபாடுகள் உண்டு. பெரும்பாலும் யாரும், உரைநடை போல பேசுவதில்லை.கோவை, நெல்லை, மதுரை, தஞ்சை என, பேச்சு தமிழ் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அதை, மண் சார்ந்த வழக்கு என்று ஏற்றுக் கொள்கிறோம்.இப்போது பிரச்னை என்னவென்றால், பேச்சு வழக்கில் புகும், பிற மொழி சொற்களே, தமிழ் மொழியை அழிப்பது தான்.தமிழ் மொழி, சொல் வளம் மிகுந்தது.

ஒரு பெண்ணின் பரிணாமத்தை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனவும், ஆணின் பரிணாமத்தை, பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை, முதுமகன் எனவும், தமிழில் கூற முடியும்.கொஞ்சம் யோசியுங்கள், இந்த பருவங்களை அனைவரும் கடந்திருப்போம்; ஆனால், அதன் பெயர்கள், நமக்கு தெரியாது.எண்களில், லட்சம், கோடிக்கு அடுத்து, 10 கோடி என்போம்; தமிழில், அதற்கு, அற்புதம் என்ற சொல் உள்ளது; 100 கோடி என்பது நிகற்புதம். நமக்கு மில்லியன், பில்லியன் கணக்கு தெரிந்த அளவுக்கு அற்புதம், நிகற்புதம் தெரியாது! கோடி கோடி என்பதை, 'பிரமகற்பம்' என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம்.

'ஆலுமா டோலுமா' பாடத் தெரிந்த நமக்கு, 'நாலுமா' என்றால் என்னவென்று தெரியாது; அது, ஐந்தில், 1 பங்கு என்பதை குறிக்கும். இப்படித் தான், தமிழ் சொற்களின் அழிவு நிகழ்கிறது.'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற திருக்குறள், இன்றும் எளிதாக புரிகிறது. 'இளமையில் கல்' என்ற ஆத்திசூடிக்கு, இன்று வரை விளக்கம் தேவையில்லை.ஆனால், சொற்களை இழந்து விட்டால், நாளைய தமிழனுக்கு, ஆங்கிலத்தில் விளக்கவுரை தேவைப்படும்!இன்று, மதிப்பெண்ணுக்காக மட்டும் தமிழ் படிக்கும் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது; இது எவ்வளவு ஆபத்தானது!இன்றைய, 10 வயது முதல், 25 வயதுடைய தலைமுறை, தமிழ் புத்தகங்களை வாசிப்பதே இல்லை; தமிழில் எழுதுவதில்லை.அவர்களுக்கு, அது தேவையில்லாதவையாக இருக்கலாம். ஆனால், அதன் மூலம் மொழியை இழக்கிறோம்!'வாட்டர் லீக் ஆகுது பாரு; அதை ஆப் பண்ணு' என்பது, சாதாரணமாக வீட்டில் பேசுகிறோம். 'தண்ணீர் கசியுது பாரு; அதை நிறுத்து' என, சொல்லலாமே!புத்தகத்தில் மட்டுமே இருந்த ஆங்கிலம், மெல்ல அலுவலகத்திற்குள் நுழைந்து, இப்போது வீட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது. சோறு, 'ரைஸ்'ஆக மாறும் அளவிற்கு!அழியும் நிலையில் உள்ள மொழிகளில், தமிழும் உண்டு என, மொழியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.எத்தனையோ இடர்கள் வந்த போதும், தமிழ் சாகாதிருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி, உடனே அழிந்து விடாது. ஆனால், இந்த நுாற்றாண்டில், தமிழ் சந்தித்துக்கொண்டிருக்கும் ஆபத்துகள் ஏராளம். இன்று, நவீனமும், நாகரிகமும், மொழி சிதைவை உண்டாக்குகின்றன.வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, புதிய வசதிகள் போன்றவை, தாய் மொழியால் கிடைக்கப் பெறவில்லை என்பதே, இன்றைய இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.அங்கெல்லாம், நம் தாய் மொழி இடம்பெற வேண்டுமானால், அதற்கான முயற்சியில், நாம் தான் இறங்க வேண்டும்.

ஆங்கிலம் மட்டுமே இருந்த கணினியில், இன்று எண்ணற்ற உலக மொழிகள் இல்லையா என்ன!நவீனத்தோடு, தமிழை இணையுங்கள்; அதற்குள் புதைத்து விடாதீர்!நவீன கண்டுபிடிப்புகளால் உருவாகும் புதிய வார்த்தைகளை, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் அல்லது அதற்கு நிகரான தாய் மொழி சொற்களை உருவாக்குதல் என்ற கருத்து வேற்றுமை, அறிஞர்களிடம் நிலவி வருகிறது.ஆனால் பல, புதிய கண்டுபிடிப்பு உபகரணங்களுக்கான சொற்களில் தான், பெரும்பாலும் மொழி சிதைவு துவங்குகிறது. அந்த கண்டுபிடிப்புகளுக்கு இணையான சொற்களை, தமிழில் உருவாக்க முடியும்; அதை உருவாக்கியும் வருகின்றனர்.

ஆனால் பயன்படுத்த வேண்டிய மக்கள், அதை ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்.மனித இனம், ஒரு தொடர்பு கடத்தி; நம் முன்னோரிடம் கற்றுக் கொள்ளும் மொழியையும், பண்பாட்டையும், வரும் சந்ததிக்கு அளிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு, தாய் மொழியை கற்றுக்கொடுங்கள்; எழுத பயிற்சி அளியுங்கள்; அவர்களிடம், தாய் மொழியில் பேசுங்கள்.இன்னும் உண்மையை சொல்வதென்றால், தமிழில் நாம் பயன்படுத்தாமல் புறக்கணித்த சொற்களை, மீண்டும் துளிர்க்க செய்யுங்கள்; நம்மால் முடியும்!

- சி.கலாதம்பி சமூக ஆர்வலர், sureshmavin@gmail.com
Similar Post You May Like

 • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

   Fri, September 25, 2020 No Comments Read More...

  தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

   Sat, September 19, 2020 No Comments Read More...

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

 • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

   Tue, September 15, 2020 No Comments Read More...

  நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right