கோவை மண்ணின் ஒரு மகத்தான தியாகி - கண்ணம்பாளையம் இராமசாமி

 Friday, September 4, 2020  12:30 PM   No Comments

இந்திய சுதந்திரப் போரில், சுதேசி இயக்கத்தைத் தொடங்கி வைத்து அன்னிய துணிகளை பகிஷ்கரிக்கவும், தூய கதராடைகளையே அணிய வேண்டுமென்று மகாத்மா காந்தியடிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தானும் தன் குடும்பத்தார் அனைவரும் கதராடை அணியவும், காந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த மதுவிலக்கு, கதராடை அணிதல் போன்றவற்றில் உறுதியாக இருந்தவர் தியாகி கே.வி.இராமசாமி.

கோவை மாவட்டத்தில் கோவைக்குக் கிழக்கே விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் கண்ணம்பாளையம் இவரது ஊர். இவரது தகப்பனார் வெங்கடராய கவுண்டர். இவர் மகாத்மாவின் வழிகளைப் பின்பற்றி நடந்து தனது மகனும் மற்றவர்களும் காந்திய நெறியில் நடக்கக் காரணமாக இருந்தவர். இவர் ஒரு விவசாயி. உணவு தானியங்களை உற்பத்தி செய்வதோடு தனது கடமை தீர்ந்ததாக இவர் நினைக்கவில்லை. மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் அரிய தர்ம காரியங்களையும் மேற்கொண்டிருந்தார்.

வெங்கடராய கவுண்டரின் மூத்தமகன் கே.வி.இராமசாமி. இவர் வெள்ளை கதராடை, தலையில் காந்தி குல்லாய் இவற்றோடு கிராமங்கள் தோறும் தனது சைக்கிளில் சென்று காந்திஜியின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியும், குடியின் கேடுகளை விளக்கிப் பேசியும், நாடு விடுதலையடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதோடு, ஒரு பள்ளிக்கூடத்தையும் தொடங்கி அதன் மூலம் சுதந்திர தாகத்தை வளர்த்தார். இவருக்கு உறுதுணையாக இவரது தம்பி கே.வி.தாண்டவசாமி கவுண்டரும் ஒத்துழைத்து வந்தார். 1930ஆம் வருஷத்தில் இவரது குடும்பம் முழுவதுமே மகாத்மா காந்தியடிகளின் போராட்ட திட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டு, மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர்.

இதில் தந்தை வெங்கடராய கவுண்டர், மகன் கே.வி.ராமசாமி, தாண்டவசாமி, ஆகியோரோடு விசுவாமித்திரன், செல்லப்ப கவுண்டர், படைக்கலம் வீடு சுப்பண்ண கவுண்டர், தொட்டிக்கட்டு வீடு கந்தப்ப கவுண்டர் ஆகியோரும் பங்கேற்றனர். 1937இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறப் பெட்டிதான் அடையாளம். இப்போது போல அப்போது சின்னங்கள் வழங்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் இவரது குடும்பம் முழுவதும் கிராமம் கிராமமாக நடையாய் நடந்து, மூவண்ணக் கொடியேந்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தனர். இவர்கள் உழைப்பு வீண்போகவில்லை. காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றி வாகை சூடியது.1938இல் திரிபுராவில் நடந்த காங்கிரசுக்கு இவர் தன் நண்பர் இம்மானுவேலுடன் சைக்கிளிலேயே புறப்பட்டார். அந்த காங்கிரசின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1939இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. போருக்கு எதிராக காங்கிரசார் பிரச்சாரம் செய்தனர். மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமா செய்தன. சென்னை மாகாண ராஜாஜி தலைமையிலான அரசும் ராஜிநாமா செய்தது. அரசை எதிர்த்து நடந்த தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு கே.வி.ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலூரில் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் பம்பாய் காங்கிரசில் 'வெள்ளையனே வெளியேறு' எனும் தீர்மானம் நிறைவேறியது. உடனே தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சி வெடித்தது. கோவையில் தேசபக்தர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்தனர். கோவை பீளமேடு ராதாகிருஷ்ணா மில்லைத் தகர்த்து மத்திய சிறையில் இருந்த தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியையும் மற்றவர்களையும் விடுதலை செய்வது என்று தீர்மானித்தனர். பைக்காரா மின் நிலையத்தை அழிப்பது என்றும் தீர்மானித்தனர். சூலூர் விமான நிலையம் தாக்கி தீவைக்கப்பட்டது. சிலர் பிடிபட்டனர். கே.வி.ராமசாமியின் தகப்பனார் வெங்கட்டராய கவுண்டர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி தலைமறைவான கே.வி.ராமசாமி நான்கு ஆண்டு காலம் தன் தலை மறைவு வாழ்க்கையில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார். இவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.500 பரிசு தருவதாக அரசாங்கம் அறிவிப்பு செய்திருந்தது. என்ன ஆச்சரியம்! இந்தப் பணியில் ஈடுபட எவரும் முன்வரவில்லை. துரோகிகளாக மாற எவரும் தயாராக இல்லை. 1946இல் இடைக்கால அரசு அமைந்த பிறகு இவர்கள் மீதிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. கே.வி.ராமசாமியும் சுதந்திரமாக வெளியே வந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் தான் திருமணம் செய்து கொள்வது என்று விரதம் இருந்த கே.வி.ஆர். அங்ஙனமே சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த வீரத் திலகம், தியாகி கே.வி.ராமசாமி 1965ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தியாகி கே.வி.ராமசாமி புகழ்!

-- தொகுப்பு: வெ.கோபாலன்.Similar Post You May Like

 • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

   Fri, September 25, 2020 No Comments Read More...

  தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

   Sat, September 19, 2020 No Comments Read More...

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

 • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

   Tue, September 15, 2020 No Comments Read More...

  நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right