கோவையின் நுழைவாயில் கருமத்தம்பட்டி - ஓர் சிறப்பு பார்வை

 Thursday, September 10, 2020  11:30 AM   No Comments

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,162 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கருமத்தாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62% . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கருமத்தம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் .

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கருமத்தம்பட்டி, கருமத்தம்பட்டிபுதூர், சோமனூர், தண்ணீர் பந்தல், ஆத்துப்பாளையம், எலச்சிபாளையம், சேடபாளையம், செகுடந்தாழி, சுப்பராம்புதூர், கருவேலங்காடு, ராயர்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு புதன்கிழமையும் சோமனூரில் பிரதான வாரச் சந்தை நடக்கிறது.

1845ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் கருமத்தம்பட்டி கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது.

இப்படியும் ஒரு உணவகம் :

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வருகிறார் ஒரு தனியார் ஓட்டல் உரிமையாளர். பள்ளி சீருடையுடன் எந்த குழந்தை டிபன் பாக்ஸ் எடுத்து சென்றாலும் அங்கு இப்படி குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எதை பார்த்தாலும் விற்று காசாக்க பார்க்கும் இந்த வியாபார உலகில், இது போன்றும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் தங்கள் சேவையை நல்லவர்கள் யாரும் சொல்லிகாட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அது பிறர் மூலமாகவே நமக்கு தெரிய வருகிறது.

தொழில்:

கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி பகுதிகளில் பவர்லூம் எனப்படும் விசைத்தறித் தொழில் முக்கியமான தொழில்களில் ஒன்றாக நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தொழில்முனைவோர் நேரடியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நூலகம் :

கருமத்தம்பட்டி, மாதப்பூரில் நூலகம் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவியர் மிகவும் பயன்பெற்றுவருகின்றனர். மாதப்பூர் ஊராட்சியில் தொட்டிபாளையம், ராமாட்சியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மூன்று கிராமங்களிலும் நூலகம் இல்லை. இங்குள்ள பள்ளி மாணவர்கள், வாசகர்கள், நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் படிக்க மூன்று கி.மீ., தொலைவில் உள்ள ராசிபாளையம், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருந்தது. மாதப்பூர் ஊராட்சிக்கென தனியாக நூலகம் திறக்க வலியுறுத்தி, வாசகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சூலூர் ஒன்றிய சேர்மன் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நூலக கட்டடம் கட்டும் பணிகள் நடந்தன. தங்கள் ஊரில் நூலகம் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருமத்தம்பட்டி மாணவரின் சாதனை

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை, கோவை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, காரின் விலை அதிகம், சுற்றுச் சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் 4 மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இந்த காரில் 300 பவுண்ட் காற்று கொள்ளளவு கொண்ட பெரிய தாங்கி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று என்ஜினை இயக்குவதன் மூலம் கார் செல்லும். வழக்கமான கார்களைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகையும் வராது, சுற்றுச் சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது ஒரு சைக்கிள் கடையில் நிறுத்தி காரின் தாங்கியில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம்.

ஆடுவதைக்கூடம் :

கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆடு, மடு, பன்றி இறைச்சிக் கடைகள் உள்ளன. ஆனால், பொது இடங்களில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை அறுக்கக்கூடாது. சுகாதாரம், தரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை இங்கு யாரும் கடைப்பிடிப்பதில்லை. இறைச்சிக் கடைகளின் ஓரமாகவே ஆடுகள் அறுக்கப்பட்டு, சாக்கடை, குப்பை நிறைந்த பகுதிகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. கருமத்தம்பட்டி பேரூராட்சி திருமண மண்டபம் அருகில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டது. ஆனால், அங்கு இதுவரை ஒரு ஆடு கூட அறுத்ததில்லை. மாறாக இங்கே சில ஆண்டுகளாக சுகாதார மையம் செயல்பட்டு வந்தது. அண்மையில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர், சுகாதார மையத்தை வேறு இடத்துக்கு மாற்றினர். தற்போது, இந்த ஆடுவதைக்கூடம் பூட்டியே உள்ளது. இங்கு மீண்டும் ஆடுவதைக்கூடம் செயல்படுமா அல்லது வேறு ஏதாவது அரசுத் துறை அலுவலகங்கள் வருமா என்பது புரியாத புதிராக உள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

கருமத்தம்பட்டி டிஎஸ்பி அலுவலகம் புதிய கட்டிடத்தில் :

கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளார் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது. தமிழக அரசு அண்மையில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழ்நாடு காவலர்கள் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் இரண்டு அடுக்கு மாடி கட்டடம் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.


பொதுமக்கள் கோரிக்கை :

கோவை மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இருப்பது கருமத்தம்பட்டி பேரூராட்சி. சுற்றுவட்டாரத்தில் வாகராயம்பாளையம், கிட்டாம்பாளையம், எலச்சிபாளையம், சோமனுார், சாமளாபுரம் உள்ளிட்ட பெரிய ஊர்கள் உள்ளன. பல ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. கோவையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இப்பகுதியில் ஏராளமானோர் உள்ளனர். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பள்ளி, கல்லுாரி பஸ்களில் செல்கின்றனர். நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள், பஸ்களையே நம்பியுள்ளனர்.

தினமும் காலை நேரத்தில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் பஸ்களில் பயணிப்பதற்கு கடும் அவதிப்படும் நிலை உள்ளது. ஈரோடு, கோபி, திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கோவை நோக்கி செல்லும் பஸ்களில், காலை, 8:00 மணி முதலே பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.இதனால், கருமத்தம்பட்டி நால்ரோட்டில் நிற்கும் மாணவ, மாணவியர் பஸ்களில் ஏற முடியாமல் தவிக்கின்றனர். குறித்த நேரத்தில் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மாணவ, மாணவியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கருமத்தம்பட்டி நால்ரோட்டில் இருந்து, காலை மற்றும் மாலை நேரங்களிலாவது, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- - மேலும் பல தகவல்களுடன் மீண்டும் சிந்திப்போம்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right