மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்றன. இருந்தும் காவிரி ஆற்றிலிருந்து நீர் கேட்டு கேரளா மல்லுக்கு நிற்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்த, முட்டுக்கட்டை போடுகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கேரளாவில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை, தமிழர்கள் முயற்சியால் உருவானது என்பதுதான் சொல்லவரும் சேதி!
தமிழகத்தில் மேட்டூர், பாபநாசம் அணைகள் மட்டுமே மிகப் பழைமையானவை. இந்த இரு அணைகளும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. கடந்த 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை காமராஜர் தமிழகத்தை ஆட்சிசெய்தார். காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் அணைகள் கட்ட முடியுமோ... அந்தப் பகுதிகளில் எல்லாம் அணைகள் கட்டப்பட்டன. தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தார், ஒன்பது அணைகள் கட்டி முடிக்கப்பட்டன. அவற்றில் மணிமுத்தாறு, வைகை அணை, ஆழியாறு, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற அணைகள் முக்கியமானவை.
அப்போது, சென்னை மாகாணத்தில்தான் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் இருந்தது. கேரளத்தைப் பொறுத்தவரை பாலக்காடு மிகப்பெரிய மாவட்டம். அங்குதான் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். பாடகர் ஜேசுதாஸின் குருநாதர் செம்பை பாகவதர் பிறந்த மண். தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இந்த மாவட்டத்துக்காரர்தான். எம்.டி வாசுதேவன் நாயர், டி.என்.ஷேசன் போன்றோரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். பசுமையும் வயல்வெளியும் நிறைந்த பூமி. கேரளத்தில் அதிகமாக நெல் விளையும் மாவட்டமும்கூட. டாப்ஸ்லிப்பை அடுத்துள்ள பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் (டாப்ஸ்லிப்), சைலன்ட் வேலி தேசியப் பூங்கா இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளன.
பாலக்காடு மாவட்டத்தின் குடிநீர் தேவையைக் கருதியும் நெல் விளைச்சலை அதிகரிக்கும் வகையிலும், 1949-ம் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் பிரமாண்ட அணையைக் கட்ட சென்னை மாகாண அரசு முடிவுசெய்தது. கேரளாவின் இரண்டாவது பெரிய நதியான பரதப்புழாவின் துணை நதியான மலம்புழா ஆற்றில் பிரமாண்ட அணை கட்ட தீர்மானிக்கப்பட்டது.

பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பக்தவத்சலம் அடிக்கல் நாட்டினார். பிறகு, 1954-ம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சர் காமராஜர் மலம்புழா அணையைத் திறந்துவைத்தார். அணை கட்டுமானப் பணியில் உடல் உழைப்பை நல்கியவர்களும் பெரும்பாலும் தமிழர்கள்தான். தமிழர்கள் இருவரின் திட்டமிடுதலாலும் தமிழர்களின் உழைப்பாலும்தான் பாலக்காட்டில் 355 அடி உயரத்துக்கு மிக பிரமாண்டமாக மலம்புழா அணை எழுந்து நிற்கிறது!
பாலக்காடு கோட்டை
மலம்புழா அணை, கேரளாவில் இடுக்கி அணைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அணை. பாலக்காடு மாவட்டம் இன்றும் செழிப்புமிக்கப் பகுதியாக இருக்கிறது என்றால், அன்று தமிழர்கள் எடுத்த முயற்சிதான் காரணம். பாலக்காடு மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா அட்ராக்ஷன் இந்த மலம்புழா அணைக்கட்டு. பாலக்காடு நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் மலம்புழா அணை உள்ளது. கோவையிலிருந்து 45 கி.மீ தொலைவில் இருக்கிறது. அணைக்கட்டின் முன் பகுதியில் பிரமாண்ட பூங்கா உள்ளது. ரோப் காரில் டேமில் பயணிப்பது த்ரிலிங்கான அனுபவம். அணைக்குள் படகிலும் செல்லலாம். அணைக்குள்ளேயே ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தீவுகள் உள்ளன. மீன் கண்காட்சியகமும் இருக்கிறது.
பாலக்காடு நகருக்குள் திப்புக்கோட்டை அமைந்திருக்கிறது. 1776-ம் ஆண்டில் ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை இது. பாலக்காடு மாவட்டத்துக்குள் நுழைந்தால் தமிழகத்துக்குள் இருப்பதுபோன்ற உணர்வுதான் ஏற்படும். எங்கு பார்த்தாலும் தமிழ் பெயர்ப்பலகைகள் காணப்படும். பேருந்துகளில்கூட தமிழில்தான் எழுதப்பட்டிருக்கும். தமிழ்ப் பட போஸ்டர்கள்தான் ஒட்டப்பட்டிருக்கும். டீக்கடைகளில்கூட தமிழ்ப் பாடல்கள்தான் ஒலிக்கும்.
-- எம்.குமரேசன்

Similar Post You May Like
-
கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்
Fri, September 25, 2020 No Comments Read More...தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப
-
மாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உரை - ஓர் சிறு தொகுப்பு
மதுரைக் கல்லூரியின் கணித விஞ்ஞானக் கழகத்தில் 24.2.1953 - அன்று ஜி.டி.நாயுடு ஆற்றிய சொற்பொழிவு அறிவுரை இது : அன்புள்ள மாணவ நண்பர்களே! இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்ட
