கோவைக்கு சிறப்பு சேர்க்கும் சின்னியம்பாளையம் - சுவாரஷ்ய தகவல்கள்

 Saturday, September 19, 2020  02:15 PM   No Comments

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6329 ஆகும். இவர்களில் பெண்கள் 2996 பேரும் ஆண்கள் 3333 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள்: சின்னியம்பாளையம், கிருஷ்ணா கவுண்டர் நகர், ராமசாமி கவுண்டர் நகர், சுப்பையா கவுண்டர் நகர், டீச்சர்ஸ் காலனி, வெங்கிட்டாபுரம்

சின்னியம்பாளையம் ஊராட்சிக்கு விருது :

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மத்திய அரசின் விருதுக்கு சின்னியம்பாளையம் ஊராட்சி 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. டில்லியில் நடந்த விழாவில், அன்றைய மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் நிகல்சந்த் மெஹ்வால், ஊராட்சி தலைவர் தேவராஜனை பாராட்டி விருது வழங்கினார்.

சின்னியம்பாளையம் தமிழப்பன் :

இவர் தனது சுப்பிரமணியன் என்ற பெயரை ஈழம் தமிழப்பன் என்று மாற்றி கொண்டவர். தற்போது, கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பின்னர், தமிழ் மொழி மீது கொண்ட அன்பால் பல தமிழ் நூல்களை படிக்க தொடங்கினார். பல தமிழ் நூல்களை படித்து கொண்டிருந்த அவர், உலகில் உள்ள அனைத்து தமிழ் நூல்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். தற்போது உலகம் முழுவதும் தமிழ் நூல்களை சேகரிக்க உலக தமிழ் நூல் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழ் மொழியின் மேல் தீராத காதலை கொண்ட இந்த முதியவர், மிக சரியான உச்சரிப்போடு ஆங்கிலத்திலும் சக்கைபோடு போடுகிறார். மேலும், தமிழை தன்னுடைய மூச்சாக கருதி வாழ்ந்து வரும் இவர் தமிழுக்கு கொடுக்கும் இவரின் அன்பு, தனது தாயிக்கு இணையான அன்பாக கருதுகிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சின்னியம்பாளையம் அரசு பள்ளி 'சென்டம்'

சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், தொடர்ந்து மூன்று முறையாக, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. சூலுார் அடுத்த சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 24 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த வருடம் மாணவன் கார்த்திக், -1041 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். அடுத்த இரு இடங்களில் மணிகண்டன் -1030 மதிப்பெண்ணும், ரம்யா- 991 மதிப்பெண்ணும் பெற்றனர். இப்பள்ளி கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. தற்போது தேர்வு முடிவுகளுக்குகாக காத்திருக்கும் மாணவர்கள் இந்த வருடமும் சென்டம் வரும் ஆவலில் உள்ளனர்.சின்னியம்பாளையத்தில் பீக்’ நேரங்களில் ஏழை மாணவர்கள் அவதி :

கோவையில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள். மிகக்குறைவாக இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களும், வேண்டுமென்றே நிற்காமல் செல்வதால், இவர்கள் படும் துயரம், நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அலுவலகம், கல்வி, வியாபார நிமித்தம் காரணமாக குவியும் மக்களால், காலை, மாலை போன்ற ‘பீக்’ நேரங்களில் பஸ்களில் கூட்டம் பிதுங்கி வழிகிறது. படியில் தினமும் பயணம்…இதைத் தவிர்க்க, பள்ளி நேரங்களை மாற்றி அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை; பெரும்பாலான பள்ளிகள், காலை, 9:15 மணிக்குள்ளாகவே துவங்கிவிடுவதால், உரிய நேரத்திற்கு செல்லவேண்டிய கட்டாயத்தால், பள்ளி மாணவர்கள் பஸ்களை பிடிக்க அலறியடித்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக புறநகரில், கூட்டத்தில் சிக்கித் தவிப்பதும், படிக்கட்டுகளில் பயணிப்பதும் மாணவர்களுக்கு தொடர் கதையாகவே உள்ளது.

சின்னியம்பாளையம் தியாகிகள்

கோவையில், புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில். 1911ல் ஜின்னிங் ஃபேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் ,1922ல் பெரும் நூற்பாலையாக வளர்ச்சியடைகிறது. இதில், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு இளம் தொழிலாளிகள் பணிபுரிந்துவந்தனர். பஞ்சாலைகளில் நடக்கும் அட்டகாசங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல்களுக்கு எதிராக துணிவுடன் குரல் கொடுப்பார்கள். ராஜி என்ற பெண் தொழிலாளி பாலியல் சித்திரவதையால் கொல்லப்படுகிறாள், குற்றவாளிகளை தேடிப்பிடித்து பழிவாங்கிக்கிறார்கள் சின்னியம்பாளையம் தொழிலாளிகள், இதனால் 4 தொழிலாளிகளும் 1946-ம்ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். பெண்கள் கதறி அழுக, தொழிலாளர்கள் முழக்கம் விண்ணைப் பிளக்க, அவர்களின் இறுதி ஊர்வலம் பிரமாண்டமாக நடந்தது. இன்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லைள் பிரச்னை இருந்து வருகிறது. ஆனால், அந்த நிர்வாகங்களை எதிர்த்து நிற்க சின்னியம்பாளையம் தியாகிகளைப் போன்ற துணிவுமிக்க போராளிகள் நம்மிடம் இல்லை.

செயல்படாத சிக்னல்; போக்குவரத்து நெரிசலில் சின்னியம்பாளையம்...

கோவை சின்னியம்பாளையம் சந்திப்பில் நீண்ட நாட்களாக ட்ராபிக் சிக்னல்கள் செயல்படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். இங்கு L&T Bypass சாலைக்கு செல்லும் வாகனங்கள் அதிகம். கோவை நகரிலிருந்து வரும் வாகனங்கள் இங்கு சின்னியம்பாளையம் சந்திப்பில் தான் வெங்கிட்டாபுரம் வழியாக செல்கின்றன. இந்த சந்திப்பில் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்கி கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இங்கு பொருத்தப்பட்டுள்ள டிராபிக் சிக்னல்கள் நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது. இந்த சந்திப்பில் சிக்னல்களை சரிவர பராமரித்து செயல்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர். மாலை நேரங்களில் சின்னியம்பாளையம் அருகில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இதனால் பள்ளிக்குழந்தைகளும் சாலைகளை கடக்கும் என்பதால் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் :

சின்னியம்பாளையம் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மிகவும் சிறப்பு பெற்ற இந்த கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

-- மீண்டும் அடுத்த பகுதி-2-ல் சந்திப்போம்Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right