கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் இன்று காலமானார்.

கோவையில் சாந்தி கியர்ஸ் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு சேவை வழங்கி வந்த சுப்பிரமணியம் இன்று காலமானார்.
கோவை சிங்காநல்லுாரில் சாந்தி சமூக சேவை அறக்கட்டளையை நடத்தி வரும் சுப்ரமணியம், சாந்தி சமூக சேவை அறக்கட்டளை உருவாக்கி, அதன் கீழ், மருத்துவமனை மற்றும் குறைந்த கட்டணத்தில், ஏழை எளிய மற்றும் வசதியற்ற மக்களுக்கு, உயர்தர சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். இது சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வெளியூரை சேர்ந்த மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மனிதநேயத்துடன் செய்யும் சேவை, கடவுகளுக்கே செய்யும் சேவை இதுதான் கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் தாரக மந்திரம்.
ரூ.5-இல் இருந்து, ரூ.15-க்கு டிபன் வகைகள், ரூ.25-க்கு தரமான முழு சாப்பாடு, டீ, பில்டர் காபி, ராகி பால், சத்து மாவு பால் எல்லாமே ரூ.5 தான். இதுநாள் வரை, ரூ. 20க்கு வழங்கப்பட்ட மதிய சாப்பாடு, 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது; மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் ஜி.எஸ்.டி., வரியும் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஏழை எளிய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவையில் உள்ள உயர்தர உணவகங்களின் சுவைக்கும், தரத்துக்கும் சவால்விடும் அளவுக்கு சந்தோஷமான சேவையை செய்து வருகின்றனர். இந்நிலையில், சாந்தி சமூக சேவை நிறுவனத்தின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை சுப்பிரமணியம் கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கினார். அதன்மூலம், இயந்திர உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்கு கொடுத்து வேகமாக வளர்ச்சியடைந்தார். இதையடுத்து, 1996-ம் ஆண்டு சாந்தி சமூக சேவை என்ற அறக்கட்டளையை தொடங்கி, அதன் அறங்காவலராகவும் இருந்து வந்தார்.

சாந்தி கியர்ஸ் நிறுவனம், வேறு நிறுவனத்துக்கு விற்கபட்டுவிட்டது. ஆனால், சாந்தி சமூக சேவையின் மூலம் தொடர்ந்து ஏராளமான சேவைகளைச் செய்து வந்தார் சுப்பிரமணியம். உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.
குறைந்த விலையில், தினசரி பல எளிய மக்களுக்கு அக்ஷய பாத்திரமாகப் பசியாற்றினார். மேலும், தினசரி 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய் தான். மருந்தகங்களில், 30 சதவிகிதம் தள்ளுபடியில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத ஏழை, நடுத்தர குடும்பத்தினர் இங்கு மருத்துவ ஆலோசனை பெறவும் ,பரிசோதனைகள் செய்யவும், மருந்துகள் வாங்கவும் அதிகளவில் வருவார்கள்.
சாந்தி சமூக சேவையின் பெட்ரோல் நிலையத்தில், ஸ்டாக் வரும் போது என்ன விலையோ?, அந்த ஸ்டாக் முடியும் வரை, அதே விலைக்குதான் விற்பனை செய்யப்படும். சாந்தி சமூக சேவை அமைப்பால் இலவச மின்மயானமும் இயங்கி வருகிறது. இவ்வளவு சேவைகளுக்கு சொந்தக்காரரான சுப்பிரமணியம், அதுகுறித்து ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்ற கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தார். இதனிடையே, உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சுப்பிரமணியம் ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு கோவை மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முகம் காட்டாமல், முகவரியும் தெரிவிக்காமல் மக்கள் மனதை குளிரவைத்த சுப்பிரமணியம், மக்கள் மனதில் என்றும் உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டேதான் இருப்பார்.

Similar Post You May Like
-
கோவையில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Sat, December 26, 2020 No Comments Read More...தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோவையில் நேற்று ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச
-
தமிழகத்திலேயே 2-வது இடத்திலேயே நீடிக்கும் கோவை மாவட்டம்
கொரோனா பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் கோவை மாவட்டம் தமிழகத்திலேயே 2-வது இடத்தில் நீடிக்கிறது. நேற்றைய (23-11-2020) நிலவரப்படி தமிழகத்திலேயே அதிக பாதிப்புகளுடன் சென்னை இருக்கிறது, பி
-
மீண்டும் ஊருக்குள் புகும் காட்டு யானைகள்; பெரியநாயக்கன்பாளையம் மக்கள் பீதி
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் சில நாட்களாக காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை விளைவித்து வருகிறது, இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். வனத்துறையினர் இந்த யானைகளை வனப்பகு
