வியப்பை ஏற்படுத்திய பாலமலை பயணம்

 Monday, April 2, 2018  06:30 PM   No Comments

நீண்ட நாட்களுக்கு பிறகு பாலமலை செல்ல தீர்மானித்தோம், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது பெரியநாயக்கன்பாளையம். அங்கிருந்தது ஒரு கிளைச்சாலை பிரிந்து செல்கிறது. புதுப்புதூர் வழியே கோவனூர் சென்றடையும் அந்த சாலையில் பயணித்தோம். முதலில் அடைவது கோவனூர். கோவனூர் ஊரை அடைந்தால் அங்கிருந்து செல்லும் மலைப்பாதை பாலமலைக்குச் செல்கிறது. நீங்கள் பேருந்தில் சென்றால் அங்கு ஜீப்-கள் வாடகைக்கு கிடைக்கும்.

இந்த கோவனூர் என்னும் ஊர் பழமையான வரலாற்றுடன் தொடர்புடையது. இருளர் என்னும் பழங்குடிகளின் தலைவன் கோவன். இவன் பெயரால் கோவன்புத்தூர் என்னும் கோவை உருவானதாகக் கருதப்படுகிறது. அதே பெயருடைய ஒரு தலைவன் பெயரில் இந்த கோவனூர் வழங்கியிருக்கலாம். ஏனெனில், கோவனூரை அடுத்துள்ள குறிஞ்சி நில மலைப்பகுதிகள் பழங்குடிகள் வாழ்ந்த பகுதிகளாகும்.

நானும் எனது மனைவியும் இரு சக்கர வாகனத்தில் சென்றமையால் பாலமலையை நெருங்க நெருங்க மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட அற்புத காட்சியினை ரசித்து கொண்டே சென்றோம். சில்லென்று சீதோசனநிலை மாற, முதலில் நாம் அடைந்தது பாலமலை சோதனை சாவடி, அப்படி ஒன்றும் யாரையும் சோதனை செய்வதாக தெரியவில்லை, விர்ரென்று மலைப்பாதையினுள் நுழைந்தோம்.

மலைப்பாதைக்கே உரிய வளைவுகள். பாதையின் இரு மருங்கிலும் மலைச் சரிவுகள். அண்மைக்கால மழைபொழிவின் காரணமாக மலைச்சரிவு மரங்கள் அடர்ந்து பசுமையாகக் காணப்பட்டது. ஓரிரண்டு இடங்களில் மரங்களற்ற பாறைப்பகுதி தொலைவில் வெண்மையாகக் காணப்பட்டது. பயணத்தின்போது ஒளிப்படம் எடுப்பதற்குக்கூட இசைவு கிட்டவில்லை. நேராக கோயிலை அடைந்தபின்னரே ஒளிப்படக் கருவியை வெளியே எடுத்தோம்.

மலைமேல் ஒரு பெரிய சமதளப்பகுதியில், நான்கு புறமும் மதில் சூழ்ந்து, மூன்று நிலை கொண்ட கோபுரத்துடன் கோயில் காட்சியளித்தது. கோயிலின் முன்புறம் கொங்குப்பகுதிக்கே உரிய கருட கம்பம் என்னும் விளக்குத்தூணுடன் விளங்கும் சிறு மண்டபம். கோயில் மிகப் பழமையானதாகக் கருதப்பட்டாலும், கோயில் கட்டுமானம் அதன் பழமையை ஒரு முந்நூறு ஆண்டுகள் பின்னோக்கிக் காட்டுகிறது எனலாம். கோயிலினுள் கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய பகுதிகளில் கல்வெட்டுகள் எவையும் இல்லை. முன்புறம் கோவிலின் தேர் உள்ளது.

கோவிலுக்கு நேர் எதிரே ஒரு மலை வலி ஒற்றை தடம் ஒன்று உள்ளது, இவ்வழி பாலமலை கோவிலுக்கு மலையின் கீழே உள்ள கிராமங்களை இணைகிறது, இவ்வழியாக வேறொரு நாள் பயணம் மேற்கொள்வோம். அங்கே சுதந்த்திரமாக சுற்றி திரியும் மாடுகள் நமது பக்கத்திலேயும் வந்து அன்பை பரிமாறியது.

மேற்கு மலைத்தொடர்ச்சி காற்று தென்றலாக வீச, மனதிற்குள் ஒரு வித புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் சென்றோம். பழமையான கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது, ரங்கனை தரிசிட்டுவிட்டு வெளியே வந்தோம்.

கோயில் தெப்பக்குளம் :

கோயில் அமைந்துள்ள சமதளத்தை அடுத்து, பள்ளமான ஒரு பாதை கீழிறங்கிச் செல்கிறது. அவ்வழியே இருபது நிமிடப்பயணமாக இறங்கிச் சென்றால் ஓர் அழகான தெப்பக்குளம் உள்ளது. வழியில் பாதையெங்கும் துண்டுக் கற்களைப் பாவியுள்ளனர். கற்கள் பாவப்பட்ட பாதையும், அதன் இருமருங்கிலும் இருக்கும் காட்டுச் செடிகளும் காண அழகானவை. தெப்பக்குளம் பழங்காலக் கட்டுமானத்துடன் தோற்றமளிக்கிறது. குளத்தின் நீர் தேக்கப்படுகின்ற அடிப்பகுதி ஒரு நீண்ட சதுர வடிவில் அமைக்கப்பட்டு அதன் தென்பகுதி மட்டும் வட்டத்தின் வில் வடிவத்தில் வளைவாகக் கட்டப்பட்டு அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளது. வடபகுதிக்கு மிக அருகில் ஒரு மண்டபம் (நீராழி மண்டபம்?) உள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து கிளம்பி நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டு மேலே நிலப்பரப்பில் சுற்றுச் சுவர்களுடன் குளத்தின் கட்டுமானம் நேர்த்தியாக உள்ளது. சுற்றுச் சுவர்களின் மூன்று பக்கங்களில் மூன்று திறப்புகள், கீழே இறங்குவதற்காக. குளத்தின் உட்பகுதியில் வடமேற்கு மூலையில் ஆறு தூண்களோடு ஒரு மண்டபம். அதில் ஏழு கன்னிகளின் சிலைத்தொகுப்பு ஒன்று காணப்படுகின்றது. குளத்துக்கு வெளியே வட கரையில், பன்னிரண்டு தூண்களுடன் சற்றுப் பெரிதாக ஒரு மண்டபம் உள்ளது. மண்டபங்கள் இரண்டும் மக்கள் புழக்கமின்றிப் பாழடைந்துள்ளன. மொத்தத்தில், தெப்பக்குளம் அதன் பழந்தோற்றத்துடன், நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுப்பழமையை நினைவூட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில், குளத்தின் பயன்பாடு மிகுதியாக இருந்திருக்கும். தெப்பக்குளத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் காட்டுச் செடிகளையும் பறவைகளின் ஒலிகளையும் பார்த்துக் கேட்டு மகிழ்ந்தோம்.

பாலமலை சித்தர் பீடம் :மீண்டும் கோயில் இருக்கும் சமதளப்பகுதிக்கு வந்ததும், அங்கே ஒரு சித்தர் பீடத்தை கண்டோம். நீலகிரியில் ஹுலிக்கல் கிராமத்தில் 1913-இல் பிறந்து, இளம் வயதில் மனம் துறவு வழியை நாட, இமயமலைப்பகுதியில் முப்பது ஆண்டுகளைக் கழித்துக் கிருஷ்ணானந்தா என்னும் பெயரில் திரும்பிவந்து இந்தப் பாலமலையில் தனிமைத் தவத்தில் தங்கியவர் 1983-இல் மறைந்தார் என்று இவரது வாழ்க்கைக் குறிப்பு கூறுகிறது. இவரது பிறப்பிடம் நீலகிரியாதலால், நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்துத் தன்னார்வலர் சிலர் இந்த சித்தர் பீடத்தைப் பேணி வருகின்றனர்.

பாலமலை கோவிலில் ராகி வடை பிரபலம் என்று எனது நண்பர் கூறியது நினைவிற்கு வந்தது, கோவில் அருகே இருந்த கடைக்கு சென்றோம், நாங்கள் கேட்ப்பதற்கு முன்பே கடைக்காரம்மா ராகி வடை 'சூடாயிருக்கு வேணுங்களா' என்று கேட்டதும் மறுக்க முடியாமல் ராகி வடைய சாப்பிட ஆரம்பித்தோம்.

கோயிலின் கோபுர வாசலில் அங்கிருந்த மலைவாழ் குடியைச் சேர்ந்தவரை பார்த்துப்பேசினோம். அவர்களிடம் பேசியதில் கிடைத்த செய்திகள்:

ஏழு மலைக்கிராமங்கள் :

பாலமலையைச் சுற்றிலும் ஏழு மலைக்கிராமங்கள் உள்ளன. அவை, குஞ்சூர்பதி, பெரும்பதி, பெருக்கைப்பதி, பெருக்கைப்பதிப்புதூர், மாங்குழி, பசுமணி, பசுமணிப்புதூர் ஆகியன. இந்த ஏழு மலைக்கிராமங்களிலும் சேர்ந்து சற்றொப்ப ஆயிரம் இருளர் குடியினர் வாழ்கின்றனர். இவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் பாலமலையே மையம். குடிமைப் பொருள் வழங்கும் அங்காடியும் இங்கு பாலமலையில்தான். பாலமலைக் கோயிலும், கோயில் விழாக்களும் இவர்களுக்கு மேன்மையானவை; முதன்மையானவை.

குருடி மலை :

பாலமலைக் கோயிலிலிருந்து பார்த்தால் எதிரே நெடிதுயர்ந்த ஒரு மலை காணப்படுகிறது. இம்மலையில் தங்கியிருந்த முனிவர் ஒருவர் பெயரால் குருவரிஷி மலை என்றழைக்கப்பட்ட மலை, காலப்போக்கில் மருவி குருடிமலை என்று வழங்குவதாயிற்று. இந்த மலையில், பெரிய பாறை போல அமைந்திருக்கும் ஓர் உச்சி, மேல்முடி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த மேல்முடியிலும் அரங்கநாதருக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது.

குருடிமலை என்று தற்போது வழங்கும் குருவரிஷிமலை, ஆங்கிலேயர் காலத்தில் (1800களில்) LAMBTON'S PEAK என்னும் பெயரில் வழங்கிற்று. வரலாற்றுச் செய்திகளைப் பதிவிடும் – குறிப்பாகச் சென்னை பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பதிவிடும் - எஸ்.முத்தையா அவர்கள் 2002-ஆம் ஆண்டு ஜூன் 3 'ஹிந்து' நாளிதழில் பதிவிடும்போது வரலாற்றாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள எழுதிய செய்தியை மேற்கோள் காட்டுகிறார். அது பின்வருமாறு:

'கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிப் பயணம் செய்யும்போது, ஒரு மலைத்தொடர் கண்ணில் படும். அதன் உச்சி ஒரு முக்கோண வடிவில் தோற்றமளிப்பதை பார்க்கலாம். இதுதான் 'லாம்டன் உச்சி'. இங்கு நான் என் குழந்தைகளுடன் மலை ஏறிச் சென்றுள்ளேன். அப்போது ஒரு மலைச்சரிவு முழுதும் வெள்ளை நிற மலர்கள் பூத்த மரங்கள் தென்பட்டன. அது ஒரு கைவிடப்பெற்ற தேயிலைத்தோட்டம். பிரிட்டிஷார் அந்த மலைத்தொடரை 'லாம்டன் மலைத்தொடர்' என்ற பெயரால் குறித்தார்கள். 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த மலைத்தொடரில் புலிகளும், சிறுத்தைகளும், காட்டெருதுகளும் மிகுந்திருந்தன. தேயிலைப்பயிர் செழித்துவளரவில்லை என்ற காரணத்தினால் இந்த மலைத்தொடரும் 'லாம்டன் மலைத்தொடர்' என்னும் பெயரை இழந்தது. ஆனால், ஆவணங்களில் 'லாம்டன் மலைத்தொடர்' என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. தற்போது 'குருடிமலை' என்ற பெயரால் வழங்கும் இம்மலையின் உச்சி, நெடுந்தொலைவிலிருந்தும் கண்ணில் படும் வகையில் உள்ளது. ஈரோட்டிலிருந்து கோவை நோக்கி வரும் வழியிலேயே இந்த உச்சி கண்களுக்குப் புலப்படுவது சிறப்பு.

பாலமலைப் பயணத்தின்போது, தொல்லியல் தகவல்கள் எவையும் கிடைப்பது அரிது என்னும் எண்ணத்தோடுதான் பயணப்பட்டோம். பழங்குடிகளின் வழிபாட்டுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் அரங்கநாதர் கோயில் பழமையானது என்றும், கோயிலின் தெப்பக்குளம் பழமையானது என்றும் அறிந்து அவற்றைப் பார்க்க எண்ணிச் சென்ற எங்களுக்கு இந்த பயணம் மகிழ்வையும் நிறைவையும் அளித்தது. கோவைப்பகுதியின் மற்றுமொரு வரலாற்றுச் செய்தியைச் கொண்டுசேர்க்கும் வண்ணம் இக்கட்டுரை அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

-- மோகன், Admin, Namma Coimbatore

More Galleries:Similar Post You May Like

 • கொரோனாவின் பிடியில் கோவை மற்றும் சேலம்

   Fri, September 25, 2020 No Comments Read More...

  தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 5692 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும

 • தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் பலி

   Sat, September 19, 2020 No Comments Read More...

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 63 டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ப

 • மலம்புழா அணை... கேரளத்துக்குத் தமிழர்கள் அளித்த கொடை!

   Tue, September 15, 2020 No Comments Read More...

  நாட்டின் தற்போதைய தலையாயப் பிரச்னை, தண்ணீர். தென் மாநிலங்களில் கேரளா மட்டுமே தண்ணீர் நிறைவுபெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. கேரளா முழுவதுமே சிறியதும் பெரியதுமாக ஆறுகள் ஓடி, அந்த மாநிலத்தை வளப்படுத்துகின்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right