இயற்கையோடு இணைய அழைக்கும் சின்னார் சூழல் சுற்றுலா

 Friday, January 24, 2020  03:30 PM   No Comments

பனியன் தொழிற்சாலைகளின் பேரிரைச்சல்களால் கட்டியெழுப்பப்பட்ட நகரம் திருப்பூர். ஊட்டி, வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களும், கொடுவேரி, கோவை குற்றாலம் போன்ற அருவிகளும் அண்டை மாவட்டங்களில் சூழ்ந்திருக்க, உழைப்புக்கும் ஊதியத்துக்கும் நடுவே ஓட்டம் பிடித்துக்கொண்டிருக்கும் இந்நகரவாசிகளுக்கு, ஆன்மிக திருத்தலங்களும், அது சார்ந்த இயற்கை வெளிகளும்தான் அதிகபட்ச சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள் அதிகம் இல்லாத இம்மாவட்டத்தில், தமிழக வனத்துறை முயற்சி எடுத்து, தற்போது ஒரு சூழல் சுற்றுலாத் திட்டத்தை சின்னார் வனப்பகுதியில் கொண்டு வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. திருப்பூர் மாவட்டத்தில் இன்னும்கூட சில பகுதிகளில் இயற்கையின் பேரழகு கொட்டிக் கிடக்கிறது என்பதற்கு சின்னார் வனப்பகுதி ஒரு மிகச்சரியான உதாரணம். அடர்ந்த மரங்கள், அதிர வைக்கும் யானைக் கூட்டம், உறுமித்திரியும் சிறுத்தைகள், தாவிக் குதிக்கும் குரங்குக் குட்டிகள் என விலங்குகளின் ராஜ்ஜியத்திற்குள் ஆர்ப்பரித்து வரும் ஆறுகள், பளிங்குக் கற்களின்மீதாகச் செல்லும் ஓடைகள் என இயற்கையின் அரவணைப்பை சின்னார் வனத்துக்குள் முழுமையாக உணர முடியும்.

எப்படிச் செல்வது..?

உடுமலைப்பேட்டையிலிருந்து மூணார் செல்லும் மலைப்பாதையில் சுமார் 30 கி.மீட்டர் பயணித்தால், மாவட்டத்தின் எல்லையாகவும், மாநிலத்தின் எல்லையாகவும் உள்ள சின்னாரைச் சென்றடையலாம். அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக - கேரள எல்லைப் பகுதிகளை இணைக்கும் இந்த சின்னார் வனப்பகுதியானது, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஓர் அங்கம். அதனால் வனத்துறையினரின் கெடுபிடிகளும், சோதனைகளும் சற்று அதிகமாகவே இருக்கும். காட்டுப் பாதைகளில் நாம் வாகனங்களை நிறுத்தினால்கூட அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படிப்பட்ட கடுமையான கண்காணிப்புக்குக் கீழ் உள்ள ஒரு வனப்பகுதியில் சூழல் சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்த மிக முக்கியக் காரணம், இந்த வனத்துக்குள் வசிக்கும் தழிஞ்சி மலைக் கிராம மக்கள்தான். மலைவாழ் மக்களின் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய காரணங்களை முன்வைத்துதான் இந்தச் சுற்றுலா திட்டமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

சின்னார் சூழல் சுற்றுலாவுக்குச் செல்பவர்கள், சில நாள்களுக்கு முன்னரே அப்பகுதி வன அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, எத்தனை பேர் வருகிறோம் என்பதை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் பயணம் குறித்த விவரங்களையும், முன் ஏற்பாடுகள் குறித்தும் வனக் காவலர் நம்மிடம் தெரிவிப்பார். வனத்தின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு, சில ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றி, இயற்கையைக் கொண்டாட விரும்பினால் நீங்கள் தாராளமாக சின்னார்க்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

இந்தச் சூழல் சுற்றுலாப் பயணம் வனத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளை வனத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவரும் பொறுப்பை வனக் காவலரோடு சேர்ந்து, தழிஞ்சி மலைக்கிராம இளைஞர்களிடம்தான் ஒப்படைத்திருக்கிறது வனத்துறை. இயற்கை கற்றுக்கொடுத்த வாழ்க்கை, நவீனம் புகுந்துவிடாத எளிமை என இந்த வனமகன்கள்தான் சூழல் சுற்றுலாவுக்கு வரும் அனைவருக்குமான பாதுகாவலர்கள். இந்தச் சுற்றுலா திட்டத்துக்காகவே இவர்களுக்குத் தனியாகப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது.தினமும் காலை 9 மணிக்கு சின்னார் தமிழக வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து சூழல் சுற்றுலாப் பயணம் தொடங்குகிறது. இந்தப் பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகள் அடர் நிறமுள்ள ஆடைகளை அணிய வனத்துறையினர் அறிவுறுத்துகிறார்கள். சூழல் சுற்றுலா என்பதால், பிளாஸ்டிக் பொருள்களோ, பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களோ எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. மது, புகை போன்றவைக்கும் அனுமதியில்லை. காட்டின் பேரமைதியை நாம் முழுமையாக உணரவேண்டும் என்பதால் ஹெட்போன்களுக்குக்கூட தடை விதித்திருக்கிறார்கள் வனத்துறையினர். வனப்பகுதிக்குள் நாம் இறங்கி டிரெக்கிங்கை தொடங்கிய மறுகணமே, இந்த இடத்துக்கு ஏன் சின்னார் என்ற பெயர் வந்தது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. காரணம் இந்த அடர் வனத்துக்குள் நெடுந்தூரம் வளர்ந்து நிற்கும் காட்டு மரங்களுக்கு இடையே, சத்தமே இல்லாமல் சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சின்னாறு. வறட்சி வாட்டி வதைக்கும் கோடை காலங்களில்கூட இந்தச் சின்னாற்றில் நீர் வற்றாதாம்.

ஆற்றை ஒட்டிச் செல்லும் வழித்தடத்தில்தான், அடுத்த ஒரு மணி நேரத்துக்கான பயணம் நீள்கிறது. கன்னி மாங்கா மரம், காட்டு எலுமிச்சை மரம், குரங்கு பலா, கொடாம்புளி, நீர் மத்தி, கல் இச்சி, நருவிலி, ஈரு கோழி எனக் காடுகளுக்கே உரித்தான அரியவகை மரங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் கடக்கையில், கானகத்தின் பிரமிப்பு நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. ஆங்காங்கே வேரோடு சாய்ந்து கிடந்த மரங்கள் சமீபத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் தீவிரத்தை நமக்குத் தெளிவாக உணர்த்தின. விலங்குகளின் எச்சங்களையும், கால் தடங்களையும் காண்பித்து, அவை எப்போது இவ்வழியே கடந்திருக்கும் என்பதையும் கச்சிதமாக கணிக்கிறார்கள் வன ஊழியர்கள். புலிகள் காப்பகமாக இருந்தாலும் சிறுத்தைகளும் யானைகளும்தான் சின்னார் வனப் பகுதியில் அதிகமாக உலாவிக்கொண்டிருக்கின்றன. உடும்பு, கருஞ் சிறுத்தை, காட்டு மாடுகள் என விலங்குகள் எல்லாம் வழக்கமாக நீர் அருந்தும் பாயின்ட்களைப் பார்ப்பதற்கே நமக்கு டரியலாக இருக்கிறது.

1 மணி நேரப் பயணத்தின் முடிவில் நாம் சென்று சேர்ந்த இடம் கூட்டாறு. அதாவது கேரளாவின் மறையூர் பகுதியிலிருந்து ஓடிவரும் பாம்பாறும், நாம் பின்தொடர்ந்து வந்த சின்னாறும் கூடுமிடம் என்பதால் இந்த இடத்தை கூட்டாறு என்று அழைக்கிறார்கள். அடுத்த சில மைல் தூரங்களில் இந்தக் கூட்டாறுடன், தேனாறு என்ற மற்றொரு ஆறும் இணைந்துகொள்கிறது. மூன்று ஆறுகளும் சேர்ந்து பயணித்து, தூவானம் நீர்வீழ்ச்சி வழியாக அமராவதி அணையில் சென்று கலக்கின்றன. மிகவும் ஆபத்தான அடர்காட்டுப் பகுதி என்பதால் தூவானம் நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. சின்னாறும், பாம்பாறும் இணையும் கூட்டாறில் தண்ணீரின் வேகமும், ஆற்றின் ஆழமும் சற்று அதிகமாகவே இருந்தாலும், இரண்டுயிர்களும் ஒன்றிணையும் அக்காட்சியைக் காணவே மனதுக்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. அந்த அழகை ரசித்தவாறே, ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருக்கும் மர இருக்கைகளில் சென்று நாம் அமர, சூடாகத் தேநீரும், சிற்றுண்டியும் கொடுத்து உபசரிக்கிறார்கள் வன ஊழியர்கள். பின்னர் சில நிமிட ஓய்வுக்குப் பிறகு பறவைகளைக் காண அழைத்துச் செல்கிறார்கள்.

மீன் கொத்திப் பறவை, தேன் சிட்டு, பஞ்சவர்ண புறா எனக் கணக்கில் அடங்காத பலவகை பறவைகள், மரக் கிளைகளில் அமர்ந்துகொண்டு நமக்கு ஹாய் சொல்கின்றன. மரங்களில் கனிகள் இருக்கும்பட்சத்தில் இந்தப் பறவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்குமாம். பறவைகளின் ஓசையை லயித்துவிட்டு மீண்டும் கூட்டாறு பகுதிக்கு வந்து சேர்ந்தால் மெய்சிலிர்க்க வைக்கும் பரிசல் பயணம் தொடங்குகிறது. ஒரு பரிசலுக்கு 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பரிசலில் ஏறும் அனைவரும் கட்டாயம் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொள்ள வேண்டும். தழிஞ்சி மலைக் கிராமத்தில் ஆண்களுக்கு நிகராக மிகச் சிறப்பாகப் பரிசல் ஓட்டக்கூடிய பெண்களும் நிறையபேர் இருப்பதால், பெண் சுற்றுலாப் பயணிகள் கூச்சத்தை துறந்து உற்சாகமாகப் பரிசலில் ஏறிப் பயணிக்கலாம். நான்கு புறமும் மலைகள் சூழ்ந்திருக்க, அதன் நடுவே கானகத்தின் ஆதிஊற்றாய் ஓடும் கூட்டாறில் பரிசல் பயணம் செய்ய நாம் நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அரை மணிநேரம் ஆனந்தமாக பரிசலில் வட்டமடித்துவிட்டு வந்து இறங்கினால், அடுத்ததாக ஆனைமலை புலிகள் காப்பகம் குறித்த பல்லுயிர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி தொடங்குகிறது.

வெறும் கடமைக்காக இல்லாமல், வனத்துறையினரும் மலைவாழ் மக்களும் தங்களின் அனுபவத்தால் கற்றறிந்த காடுகளின் இயல்பு குறித்தும், அதன் நியதிகள், விலங்குகளின் தன்மை, உயிர்ச்சூழல் எனப் பலவற்றையும் நம்மிடையே பகிர்ந்து, இயற்கை மீதான ஒரு புரிதலை நமக்குக் கடத்துகிறார்கள். இந்நிகழ்வு முடிந்தவுடன் நாம் விரும்பினால் ஆற்றங்கரையோரமே நமக்கு மதிய உணவு பரிமாறப்படும். அல்லது வனத்திலிருந்து வெளியேறி மீண்டும் வனத்துறை சோதனை சாவடியை அடைந்தவுடன் உணவு வழங்கப்படும். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்தச் சூழல் சுற்றுலாப் பயணம் மதியம் 2 மணியோடு நிறைவடைகிறது. காலை சிற்றுண்டி, டிரெக்கிங், பரிசல் பயணம், மதிய உணவு என இவை அனைத்துக்கும் சேர்த்து நபர் ஒன்றுக்கு ரூபாய் 500 வசூலிக்கிறார்கள். வாரத்தின் அனைத்து நாள்களிலும் செயல்படும் வகையில் இந்தச் சூழல் சுற்றுலாத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதால், நமக்கு வசதியான நாள்களைத் தேர்வு செய்து கொண்டு நாம் சின்னார்க்கு வண்டி ஏறலாம்.

இந்தச் சுற்றுலா திட்டம் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட வன அலுவலர் முகமது சபாப், 'கடந்த ஜனவரியில் தொடங்கிய இத்திட்டம், சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தச் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் வங்கிக் கணக்கில் சேமித்து வைத்து, தழிஞ்சி மலைக் கிராமத்தின் சீரமைப்புப் பணிகள் மற்றும் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அதற்காகவே, 'தழிஞ்சி சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு' என்ற பெயரில் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல், இயற்கை சார்ந்த ஒரு வாழ்வியல் அனுபவத்தையும் பெற நினைக்கும் பயணிகளுக்கு சின்னார் ஓர் அற்புதமான சுற்றுலா தலம்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel