என் வீட்டுத் தோட்டத்தில் – சின்ன வெங்காயம்

 Thursday, November 29, 2018  05:30 PM   No Comments

வெங்காயம், பொதுவாய் வீட்டுத் தோட்டத்தில் பேசப்படாத ஓன்று. மாடித் தோட்டம் என்றால் தக்காளி, கத்தரி, மிளகாய், அவரை, வெண்டை என்ற அளவில் முடித்துக் கொள்வோம். வெங்காயத்தை ஒரு முக்கிய காய்கறியாக யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்மை நிறைய நேரம் தலைச்சுற்ற விடுவது வெங்காயம் விலை தான். நிறைய நேரங்களில் ஊடங்களில் தவறாமல் இடம் பெறும் ஓன்று வெங்காயம் விலை. சில நேரம் கிலோ பத்து ரூபாய் என்று அடிமாட்டு விலைக்கு விற்கும் வெங்காயம், பல நேரங்களில் கிலோ அறுபது ரூபாய், என்பது ரூபாய் என்று ஏறி வீட்டில் வெங்காய சட்னி, வெங்காய தோசைக்கு எல்லாம் வேட்டு வைத்து விடுகிறது.

விலை கூட பரவாயில்லை, இப்போவெல்லாம் சின்ன வெங்காயத்திற்கும் பெரிய வெங்காயத்திற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. சந்தையில் ‘அடடா, சின்ன வெங்காயம் முத்து போல குண்டு குண்டா இருக்கே’ என்று போய் விசாரித்தால் அதை பெரிய வெங்காயம் என்கிறார்கள். பெரிய வெங்காயம் சைஸே இப்படி என்றால், சின்ன வெங்காயத்தை உரித்து அதில் ஒளிந்திருக்கும் வெங்காயத்தை கண்டுபிடித்து சட்னிக்கு வெங்காயத்தை சேர்ப்பதற்குள் விடிந்து விடுகிறது. அந்த வேலை சில நேரம் என் தலையிலேயே விழுந்ததின் விளைவே மாடித்தோட்டத்தில் இவ்வளவு வெங்காயம்.

முன்பு பெரிய வெங்காயம் பெரிய அளவில் முயற்சித்து வெற்றியும் கிடைத்ததை இந்த பதிவில் கொடுத்திருந்தேன். அதே போல சின்ன வெங்காயத்தையும் பெரிய அளவில் முயற்சித்தால் என்ன என்று ஆரம்பித்து விட்டேன்.

வெங்காயம், விதையில் இருந்தும் கொண்டு வரலாம், வெங்காயத்தில் (bulb) இருந்தும் கொண்டு வரலாம். சின்ன வெங்காயம் விதை இங்கே கோவை வேளாண் கல்லூரியில் (TNAU) கிடைக்கிறது. விலை இருபது ரூபாய் (முன்பு பத்து ரூபாயாக இருந்தது. நான் இந்த முறை ஜூலையில் அக்ரி இன்டெக்ஸ்-ல் வாங்கும் போது இருபது ரூபாய் ஆக்கி விட்டார்கள்). சந்தையில் நல்ல நாட்டு வெங்காயம் கிடைத்தால் அதையும் பயன்படுத்தலாம்.விதைகளில் இருந்து நாற்று கொண்டு வரும் போது, நமக்கு விலை குறைவாகிறது. ஒரு இருபது ரூபாய் பாக்கெட்டில் இருந்தே நாம் பல நூறு செடிகள் எடுக்கலாம். தவிர, வெங்காயம் என்ன வகை, என்ன தரம் என்பது தெளிவாக தெரியும். ஆனால், விதையில் இருந்து நாற்று எடுத்து கொண்டு வரும் போது, வெங்காயத்தை நேரடியாக விதைப்பதில் விளைச்சல் எடுப்பதை விட கூட இரண்டு மாதம் விளைச்சலுக்கு காத்திருக்க வேண்டும்.

நேரடியாக வெங்காயத்தை விதைப்பதில் கொஞ்சம் செலவு ஆகலாம். தவிர சந்தையில் வாங்கும் வெங்காயத்தின் தரமும், விளைச்சலும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நாம் சீக்கிரமே விளைச்சல் எடுக்கலாம்.

வெங்காயத்தை நாற்று எடுத்து நடுவது, தகுந்த இடைவெளி விட்டு நட எளிதாக இருக்கும். நாற்று எடுக்க நர்சரி ட்ரே பயன்படுத்த வேண்டாம் (முன்பு பெரிய வெங்காயத்திற்கு நர்சரி ட்ரே பயன்படுத்தி இருப்பேன். அது தேவை இல்லை). ஒரு பெரிய Grow Bag-ல் கீரை மாதிரி தூவி நாற்று எடுத்து, அதை எடுத்து நடலாம். வெங்காய நாற்றுகள் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் எடுத்து நட்டிய பிறகு எளிதாக பிடித்து வளர்கிறது. அதனால் ரொம்ப நேர்த்தியாக எடுத்து நட வேண்டிய அவசியம் இல்லை.

முன்பு வெங்காயம் விதையாக போட்டால் விதைக்கு ஒரு வெங்காயம் மட்டும் தான் வரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த முறை ஒவ்வொரு செடியில் இருந்தும் கொத்தாக நான்கு-ஐந்து வெங்காயம் வந்திருந்தது.

வெங்காயம், மிக எளிதான ஒரு காய்கறி என்று சொல்லலாம். இது வரை வெங்காயத்தில் எந்த நோய் தாக்குதலோ, பூச்சி தாக்குதலோ நான் பார்க்கவில்லை. நாற்று எடுத்து விட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம். வெங்காயத்தை நேரடியாக விதைக்கு போது (onion bulb), இரண்டு-இரண்டரை மாதத்திலேயே விளைச்சல் எடுக்கலாம் செடியின் பச்சை நிறம் போய், லேசாய் பழுப்பாக ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வெங்காயம் செடியின் மேல்பரப்பிலேயே தெரியும். அதையும் கொஞ்சம் கவனித்து, நல்ல திரட்சியாக தெரியும் போது அறுவடை செய்யலாம். ஒரே தடவையில் மொத்தமாய் அறுவடை செய்ய வேண்டியதில்லை. நல்ல திரட்சியான வெங்காயத்தை மட்டும் அறுவடை செய்துவிட்டு மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றி வந்து இரண்டு வாரம் கழித்து மிச்ச செடிகளை அறுவடை செய்யலாம்.Similar Post You May Like

 • வாருங்கள் வாகை மரம் வளர்ப்போம்...

   Thu, January 3, 2019 No Comments Read More...

  வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற

 • பெண்கள் விரும்பும் வீட்டுத்தோட்டம்

   Tue, January 1, 2019 No Comments Read More...

  தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பது அனைவருக்கும் சாத்திமான ஒன்றுதான் என்று தோட்டக்கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். தனி வீடுகள் மற்று

 • இயற்கை முறையில் புளியமரம் சாகுபடி

   Sun, December 30, 2018 No Comments Read More...

  புளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியை
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel